3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

வரும் நவம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் முதன் முறையாக சென்னையில் 2 தினங்களுக்கு முன்பு அதி நவீன ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இது புதுமையான திட்டம்எனவும் அவர் கூறினார். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கலாம் எனவும், இதன் மூலம் மாணவர்கள் உலக செய்திகளை அறிந்து கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், வரும் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்எனவும், மேலும் 9.11,12 ஆகிய அனைத்து வகுப்புகளும் இணையதள வசதியுடன் கணினி மயமாக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts