3 எம்.எல்.ஏ.க்கள்  மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை  கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு 

மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, கபில் சிபல் ஆகியோர் திமுக சார்பில் ஆஜராகி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்தனர்.

அதில் சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதால், மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திமுகவின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக அரசு கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல்.ஏக்களுக்கும், சபாநாயகர் தனபால் 185 பக்கங்கள் கொண்ட நோட்டீஸை அனுப்பினார்.

அந்த நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts