3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய மேலும் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

        பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி  தாக்குதல்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள டாங்தார் எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர். அதை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய எதிர்த்தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று முதல் இன்று வரை நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சண்டை முடிந்ததும் அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது.

Related Posts