31- வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் 31- வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் 31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. . இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதிஅமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.. இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடையே கருத்து ஒற்றுமை உருவாக்கஇந்தக் கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி கருத்து ஒற்றுமை உருவானால், ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரி நீடிக்கும். மற்ற 99 சதவீத பொருட்கள், 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரப்படும். குளிர்சாதன இயந்திரங்கள், ஆட்டோமொபைல் டயர், சிமெண்டு மற்றும் சில எலெக்ட்ரானிக் கருவிகள் மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான தொழிலை ஊக்குவிக்க சிமெண்டு மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. 5மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதாலும் வரி குறைப்பு சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு தொகை 8 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது இதனை விரைவில் வழங்க இந்த கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார். முந்தைய கூட்டங்களில் பலபொருட்களின் ஜிஎஸ்டி வரியை குறைக்க சொல்லி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது எனவும் தற்போது 11 பொருட்களுக்கு சேவை வரியை குறைக்கவும், 75 பொருட்களுக்கு வரி விலக்குஅளிக்கவும் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Posts