4 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சென்னை குரோம்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

        சென்னை, நீலாங்கரையில், முத்துராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட குட்காபொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்த போது, காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அவர் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், குரோம்பேட்டை, ஆர்.கே.நகர் பகுதியில் அவரது தம்பியுடன் தங்கியிருப்பதும்  தெரியவந்தது. மேலும், பெங்களூரில் இருந்து சுமார் 4 டன் குட்கா, புகையிலை பெருட்கள் கொண்டுவரப்பட்டு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் அவரது தம்பி முத்துசுதாகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

       இதனிடையே, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெற்குந்தி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் தடை செய்யப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேந்தர், பாபு, ரங்காராவ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts