4 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு மனு

 

 

காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு  இன்று  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டது. இந்நிலையில், காவிரி வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு சார்பில் இன்று அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுவதை ஏற்க கூடாது என கூறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஏற்கனவே நீர் தந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறுவது உண்மை இல்லை எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts