5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பேய்மழை பெய்து மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. செப்டம்பர் மாதம் மழை ஓய்ந்து கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி இந்த மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இடுக்கியில் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதற்கிடையே அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்கிறது. இதனால் கேரளாவில் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வருவாய் துறையினர் தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.குறிப்பாக இடுக்கி, பத்தினம்திட்டா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Posts