5 நாட்கள் காவல் முடிந்து ப.சிதம்பரத்தை தனி நீதிமன்றத்தில் சிபிஐ இன்று ஆஜர்படுத்தப்படுத்துகிறது

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அத்துடன் ப.சிதம்பரத்தை கைது செய்யவும், சி.பி.ஐ. காவலில் வைக்கவும் தனி நீதிமன்றத்திற்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்திற்கு அவரை இன்று வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Posts