5 மாநில சட்டப்பேரவையின் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தேர்தல் அறிவித்தது. அதில், சட்டீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த 12, 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வரும் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஈடுபட்டுள்ளார். கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசாரும், துணை ராணுவப்படையினரும்  மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் சபாநாயகர் உட்பட காங்கிரசை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள், பாஜகவில் இணைந்து  தேர்தலை சந்திக்கின்றனர்.  தேர்தலை முன்னிட்டு இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Posts