58 புள்ளி 3 சதவீத வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58 புள்ளி 3 சதவீத வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      ஆயிரத்து 192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின்  எஞ்சிய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர். இந்நிலையில்  நேற்று  அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது..  இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தம் பதிவான வாக்குகளில் 58புள்ளி 3 சதவீத வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது

Related Posts