7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது : தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தயக்கம் காட்டிய நிலையில், அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் கடந்தும் இதுபற்றி ஆளுநர் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், 7 பேரை விடுவிக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு கடந்த மாதம் விசாணைக்கு வந்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநர் பரிசீலனையில் உள்ளதாகவும், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Posts