73வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில்  பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி, சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைந்த பிறகு, அவர் முதல்முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் சுதந்திர தின உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களைப் போலவே, பிரதமர் மோடியின் இப்போதைய உரையிலும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், அவரது சுதந்திர தின உரையின்போது அறிவிக்கப்பட்டவையாகும். மேலும், தனது அரசின் சாதனைகள் குறித்தும், நீர்ப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு, மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

Related Posts