8 வழிச் சாலை மேல்முறையீடு வழக்கு விசாரணை – ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

8 வழிச் சாலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சேலம் – சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதைத்தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 வழிச் சாலை திட்டம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கை நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Posts