850 ஆண்டு பழைமையான பாரீஸின் நோட்ரே டேம் தேவாலயத்தில் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டேம் தேவாலயம் தீயில் எரிந்து சேதமடைந்ததால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாரீசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை அந்த தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் தேவாலயத்தின் மீது வேயப்பட்டுள்ள 100 மீட்டர் நீளமுள்ள மேற்கூரையில் பற்றிய தீ பின்னர் அருகில் இருந்த கோபுரத்திற்கும் பரவியது..மரச் சாமான்கள் மற்றும் ஈயத்தால் செய்யப்பட்டது என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததில் அந்தக் கோபுரம் சரிந்தது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தங்கள் நாட்டின் வரலாற்றுச் சின்னத்தைக் காக்க தீவிரமாகப் போராடினர்.தீயணைப்பு வீரர்களின் முயற்சி காரணமாக தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் காப்பாற்றப்பட்டன. தேவாலயத்தை குளிர்விக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.. தீ விபத்து  குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நோட்ரே டேம் தேவாலய தீவிபத்தால் பிரான்ஸ் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஜெர்மனி,இங்கிலாந்து, வாடிகன் , அமெரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் சோகத்தை பிரான்ஸ் மக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த விபத்து குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான். நோட்ரே டேம் தேவாலயம் மீண்டும் கட்டமைக்கப்படும் என்றும் இதற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்படும் என்றும் கூறினார்..

Related Posts