91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

நாட்டின் 17- வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.  இத்துடன், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாகவும், ஒடிசாவில் முதல்கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.  இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  மக்களவைத் தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் 37 தொகுதிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.  91 மக்களவை தொகுதிகளிலும்ஆயிரத்து 266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில்  தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.. தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்கான கால அவகாசமும்  முடிவுக்கு வந்தது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதை உறுதிசெய்ய முக்கிய நகரங்களில்  காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது. மாவோயிஸ்ட் பாதிப்பு மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Related Posts