தமிழ்நாடு

வடமாநிலங்களில் பனிக்காலம் : சென்னையில் காற்றின் தரம் மோசம்

சென்னையில் 5-வது நாளாக காற்றின் தரம் மோசமாக உள்ளது.

பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, காற்றின் இழுவை காரணமாக சென்னை வரை பரவியுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களாக தலைநகர் டெல்லியைக் காட்டிலும் சென்னையில் காற்றின் தரம் குறைந்துள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்னையில் ஆலந்தூரில் காற்றின் தரம் 288 புள்ளிகளாக இருந்தது. இது காற்றின் தரக் குறியீட்டில் மோசம் என்ற அளவில் இருக்கிறது. அதேபோல, சென்னை மணலி பகுதியில் இன்று காலை 10 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 328 புள்ளிகளாக இருக்கிறது. இது மிகவும் மோசமான குறியீடாகும். வேளச்சேரியில் காலை 10 மணி நிலவரப்படி 292 புள்ளிகளாக இருந்தது.

சென்னை மட்டுமல்லாது விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட கடற்கரைப் பகுதி நகரங்களிலும் காற்று மாசின் தாக்கம் அதிகமாக உள்ளது. தீபாவளிக்குப் பின் டெல்லியில் காற்று மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்டு மீதமிருக்கும் நெல், கோதுமை, பார்லி கதிர்களைத் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் உருவாகும் புகை டெல்லியைத் தாண்டியும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, வாகனங்களின் பெருக்கம், கட்டிடங்களை இடித்தல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் புகையும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க முக்கியக் காரணமாகும். குறிப்பாக வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கிவிட்டதால், பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. காற்றில் பரவியுள்ள புகை, சிறு கரிய துகள்கள் போன்றவை பனிமூட்டம் காரணமாக மேலே எழும்ப முடியாமல் இருப்பதால், கடந்த ஒரு வாரமாக காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close