ஆன்மிகம்தமிழ்நாடு

ஆருத்ரா தரிசன விழா – இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவபெருமானின் முதல் சபை என அழைக்கப்படும் திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஸ்ரீ வடராண்யேஸ்வரர் கோயிலில், ஆருத்ரா தரிசன விழா களைகட்டியது. நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதிகாலை 4 மணியளவில் நெல்லையப்பர் – காந்திமதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் பக்தர்கள் காத்திருந்து வழிபாடு மேற்கொண்டனர். நடராஜ பெருமானுடன் சிவகாமி தாயார் எழுந்தருளினார்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு முழுவதும் அபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து காலை 7.40 மணியளவில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி பூச்சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் கிரிவலம் வந்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக பஞ்சாமிர்தம், நெய், தேன் உள்ளிட்ட 64 வகையான பொருட்களால் நடராஜருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. திருச்சி அடுத்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. மார்கழி மாதத்து பவுர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் ‘திருவாதிரை’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.

Tags
Show More

Related News

Back to top button
Close