Home Articles posted by Madhimugam

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஜி.எஸ்.லட்சுமி, 2008-2009ஆம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜி.எஸ்.லட்சுமி கூறும் போது, முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமை அளிப்பதாகவும், ஒரு வீராங்கனையாகவும், கள நடுவராகவும் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயல்படும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களிலும், மேற்கு உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இம்மாதம் 4ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நாள் முதல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், 100 டிகிரியைத் தாண்டி, வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை என்றும், அதாவது, அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

7 கட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி அன்று எண்ணப்படுகின்றன. ஆனால் இந்த முறை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்று எண்ணுவது புதிய நடைமுறை என்பதால் இதுதொடர்பாக மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை சின்னமலையில் உள்ள தனியார் ஓட்டலில் பயிற்சி தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா, தேர்தல் செலவின இயக்குனர் திலிப் சர்மா ஆகியோர் பங்கேற்று பயிற்சி வழங்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்முறை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் புண்டி பகுதியை சேர்ந்த போலா சங்கர் என்ற 43 வயதான நபர் கடுமையான வயிற்று வலி காரணமாண அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவர் வயிற்றில் 100க்கும் மேல் ஆணிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த ஆணிகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர்.

அந்த நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் அவர் மெல்லிய கம்பிகளையும் விழுங்கி உள்ளதும் அறுவை சிகிச்சையின் மூலம் தெரிவியவந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நபரின் வயிற்றில் இருந்த ஆணிகளால் அவரது வயிற்றில் சிராய்ப்பு கூட ஏற்படாதது ஆச்சர்யமளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் ,வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கடந்த மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வீடாக கருதப்படும் சின்னப்பன்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்திய அவர்கள், அக்கம் பக்கம் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நான்கு பேர் வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கமலுக்கு  மோடி பதில்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதில்

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல – மோடி

எந்த ஒரு தீவிரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது – மோடி

ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல் கருத்துக்கு பிரதமர் மோடி பதில்

தமிழகத்தின் பல்வேறு டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மாலை நேரத்தில் இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது. பவானி, பெருந்துறை, கோபி, அந்தியூர் மற்றும் ஈரோட்டை சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்ததால் கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. குமாரபாளையம்  அருகே உள்ள குப்பாண்டபாளையம், தட்டாங்குட்டை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சூறைக் காற்றுடன் மிதமான மழை பெய்ததால் மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர்.

இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  திருச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யாத இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, அனல் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கோவை, ஈரோடு, திருச்சியிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் 26 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 88 காசுகளுக்கு, விற்பனையாகிறது.

இதேபோல் டீசல் 13 காசுகள் குறைந்து 69 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனையாகிறது.  தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

 

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 91 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் 296 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் நேற்று  3 ஆயிரத்து 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டத. இன்று கிராமுக்கு 43 ரூபாய்அதிகரித்து 3 ஆயிரத்து 242 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 8 கிராம் சுத்த தங்கம் 296 ரூபாய் அதிகரித்து  25 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மே 5ம் தேதி 24 ஆயிரத்து 96 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் இப்போது 24 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமெரிக்கா ஈரான் இடையே பிரச்னை, வளைகுடா பதற்றம், உலக வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.