Home Articles posted by Madhimugam (Page 2)

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 680 ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 49 ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது.

காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இந்தியக் காவல்பணி அதிகாரிகள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் 92 பேரும், வெளிநாடுகளைச் சேர்ந்த 11பேரும் இந்த ஆண்டு பயிற்சியை முடித்துள்ளனர்.

பயிற்சி முடித்துப் பணிக்குச் செல்லும் இவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விழாவில் பங்கேற்றுப் பயிற்சி முடித்த காவல் அதிகாரிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சர்தார் வல்லபாய் படேல் 630 தனித்தனி பிரதேசங்களை இந்தியா உடன் இணைத்தார். சர்தார் வல்லபாய் படேலால் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை இன்று முதல் நான்கு நாட்களுக்கு மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளனர்.

கர்நாடகத்தில் குறிப்பாக, வட மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் என மொத்தம் 17 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

அம்மாநிலத்தில் பெய்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 86 தாலுகாக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை மற்றும் வெள்ளத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 49 ஆயிரத்து வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் இன்று பார்வையிட உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பேசுகையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால் பார்வையிடும் மத்திய குழுவினர் இன்று முதல் 27ம் தேதி வரை என மொத்தம் 4 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்

நடப்பு பருவத்தில் நேரடி நெல் சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு உழவு மானியம் வழங்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யுமாறு, விவசாயிகளை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும்போது, சுமார் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும்,

5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உழவு மானியம் வழங்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, உள்ளூர் பாசன வசதியின் துணையோடு, நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் பெருமக்களும், உழவு மானியத்தை பெற்று , நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊட்டச்சத்திற்கான மத்திய அரசின் போஷன் அபியான் தி்ட்டத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக தமிழக அரசுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்கும் வகையில், போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக அரசுக்கு திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறை மாற்றம், சமுதாய நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒன்று திரட்டுதல் ஆகியவற்றில் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அளவில் முதலிட விருதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள், பொது மென்பொருள் பயன்பாடு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கினார். விருதுகளை தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா பெற்றுக் கொண்டார். மேலும், விருதுக்கான ஊக்கத் தொகை முறையே ஒரு கோடி ரூபாய், ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் 50 லட்சத்துக்கான காசோலைகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில்  பெரும்பாலான  மாவட்டங்களில்,  ஓரிரு  இடங்களில்,   மிதமான  மழைக்கு   வாய்ப்புள்ளதாக  சென்னை  வானிலை  ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என பாகிஸ்தானுக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவுரை வழங்கினார்.

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், இந்த விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டது.

ஆனால், பாகிஸ்தானின் முயற்சி ரஷியா உள்பட முக்கிய நாடுகளின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும்படி ஏஞ்சலாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை குறைத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இம்ரான்கானுக்கு அறிவுரை வழங்கினார்.

நைஜீரியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியா நாட்டின் குவாரா மாநிலத்தில் உள்ள ஜேபா-இரோனி நெடுஞ்சாலையில் வேன் ஒன்று 19 நபர்களுடன் சென்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் வேன் வேகமாக திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நைஜீரியாவில் மோசமான சாலைகள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மூவாயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28 ஆயிரத்து  800  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 48  ரூபாய் 20 காசுகளுக்கும்,  கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோ 48 ஆயிரத்து 200 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 228  புள்ளி  இரண்டு மூன்று அதிகரித்து  36  ஆயிரத்து  701 ஆக முடிவடைந்தது.

தேசியபங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88  புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து  829  ஆக  நிறைவடைந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறைந்த போதும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தற்போது மேட்டுர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம்117 அடியாகவும், நீர் இருப்பு 88 புள்ளி 795 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.