Home Articles posted by Madhimugam (Page 352)

 

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பாரா? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி : ஏப்ரல்-12

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கண்டித்து இன்று தனது அலுவல்கள் பாதிக்காத வகையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரப்பிரதேசத்தில் மகளுக்காக நீதி கேட்டு போராடிய தந்தைக்கு நேர்ந்த கொடூரம் வெட்கித்தலைகுனிய வேண்டிய செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டன என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இதனைக் கண்டித்தும் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. 

சென்னை, ஏப்ரல்-12

வங்கக் கடலில் மீன்கள் இனப் பெருக்கம் செய்வதற்காக ஆண்டு தோறும் தமிழக கடலோர மாவட்டங் களில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம்  தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது. இந்த நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமாரி வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டின் தடைக்காலம் வரும் 14 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அன்றைய தினத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதியில்லை.

இந்த தடைக்காலத்தில் வலைகளை சீரமைப்பது, விசைப்படகுகளை பழுது பார்ப்பது, பெயின்ட் அடிப்பது உள் ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நேரத்தில் மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கும் என்பதால் அவர்களுக் கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. 

 

 

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏப்ரல்-12

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25). இன்னும் திருமணம் ஆகவில்லை. பொம்மை வியாபாரம் செய்து வந்தார். பாட்டி ஆதரவில் வசித்து வந்தார். இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண் எண்ணை கேனுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது”- பா.தர்மலிங்கம். இவ்வாறு அந்த சுவற்றில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார். பிறகு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பற்றி எரிந்த தீயால் அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். மேலும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் ஓடிவந்தனர். தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

 

 

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வீட்டு மாடியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல்-12 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் கண்டன பேரணி, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சென்னையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டு உள்ளது. MODI GO BACK என்ற வாசகம் அடங்கிய பலூனை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கருப்புக்கொடி காட்டியும், பலூன்கள் பறக்கவிட்டும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் 300க்கு மேற்பட்டோர் கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடி ஏந்தியும், லாரிகளில் கறுப்பு கொடியினை கட்டியும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். 

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

 

 

போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-12

சென்னையை அடுத்த  திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம்  10 மணிக்கு பிரதமர் மோடி திருவிடந்தை சென்றடைந்தார். பின்னர் காரில் கண்காட்சி வளாகத்திற்கு சென்றார். விழாவில், இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் ராணுவ ஆயுதங்கள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. 

ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது :-
விழாவில் “காலை வணக்கம்” என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார். வரலாற்று சிறப்பு மிக்க ஊரில் ராணுவ தளவாட கண்காட்சி நடக்கிறது. தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது .உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு நமது நாடாகும்.  2100க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். முதன்முறை நான் ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக இந்திய நாடுகளில் தயார் செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.இந்தியா முதல்முறையாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது.  போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.சிறு குறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் . அமைதியை விரும்பும் இந்தியா எல்லையில் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்பை அளிக்கிறது. சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியது நமக்கு பெருமை.  பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்கள் அமைய உள்ளது.  ராணுவ தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சி  அடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.
இறுதியில் “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” என திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

 

 

 

அமராவதி நகரம் பசுமை வெளிபோல் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடா : ஏப்ரல்-12

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில், விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி ஆந்திர மக்களின் உணர்வுகளில் விளையாடுகிறார் என்றும் பற்றி எரியும் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்காமல் அரசியல் ரீதியாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரம் பசுமை வெளிபோல் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்தார்.

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்திருந்தார். 

சென்னை, ஏப்ரல்-12

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வருகையின்போது தி.மு.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருணாநிதி இன்று கருப்பு சட்டை அணிந்திருந்தார். வெள்ளை வேட்டியும், கருப்பு சட்டையின் மேல் மஞ்சள் நிற துண்டும் அணிந்திருந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

 

பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து, பாஜக எம்பிக்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி : ஏப்ரல்-12

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இதனால், மக்களவை, மாநிலங்களவை முழுவதும் முடங்கின. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த பணியும் செய்யாமலேயே முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய அலுவல்களை தொடர்ந்த படியே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-12

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 50மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வின் சாவந்த் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இதையடுத்து. இந்தியாவின் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. 12 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்தபடியாக இந்தியா பதக்கப்பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

 

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் கருப்புக் கொடிகளுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஏப்ரல்-12

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை எதிர்த்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் சார்பில் இன்று காலை விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.அப்போது பாரதிராஜா கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். மக்கள் கோரிக்கைக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே ஆலந்தூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். கருப்பு சட்டை அணிந்திருந்த தொண்டர்கள் “மோடியே திரும்பி போ” என்று கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கான கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு மண்டபங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.