Home Articles posted by Madhimugam (Page 411)

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர், சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று, கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அரசியல் கட்சிகளும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவேரி மீட்புக்குழு, மே 17 இயக்கம் ஆகியவை அமைப்புகளும் அறிவித்துள்ளன. இதனால், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி சாலை, பாரதி சாலை, மெரினா கடற்கரை சாலை என அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 4-வது நுழைவு வாயிலில் பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு  திரட்டவும் மதுரை, தேனி    மாவட்டங்களில்  நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 10-ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை கூடலூர் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்பம் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம், நியூட்ரினோ திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயற்கையை அழித்து விட்டு அணு ஆராய்ச்சிக்காக மலையை குடைந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு துடித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நியூட்ரினோ அணுகுண்டுக்கு சமமான நாட்டை அழிக்கக்கூடிய ஒரு திட்டம் என்று தெரிவித்தார்.

 

 

அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி, விளையாட்டை ரசிக்கப்போறியா… என்று சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகுறித்து  நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் காட்டமுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-10

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் டி20 போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன. இன்று நடைபெறவிருக்கும் போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மைதானம் அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், “அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப் போறியா? சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்கப் போறியா? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்கச் சொல்லப்போறியா?” என்று பதிவிட்டுள்ளார்.  

 

 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் : ஏப்ரல்-10

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று அதிகாலை இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் அவர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில், படுகாயமடைந்த வினோத் சிங், ஜாக்கி சர்மா ஆகிய 2 ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 4ஆம் நாளாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார்.

திருவாரூர் : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 7ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கிய இந்த பயணம் 4ஆம் நாளான இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இருந்து 4ஆம் நாள் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி வழியாக பவித்திர மாணிக்கம் சென்றார். இன்றைய பயணத்தில் குளிக்கரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். திருவாரூரில் தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலினின் இன்றைய பயணம் மாலையில் திருத்துறைப்பூண்டியில் நிறைவடைகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி,  அப்பகுதி கிராம மக்கள் 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி : ஏப்ரல்-10

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம் , மடத்தூர், சில்வர்புரம்  உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு தாம் எதிரி என்றும் அறிவியலுக்கு எதிரி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-வது நாளாக கம்பம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தான் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார்.

காமன்வெல்த் மகளிர் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-10

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று 25 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. 

இந்த போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டி தொடரில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் : ஏப்ரல்-10

தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தின. அப்போது, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி, இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தின்போது, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழும் அபாயம்  உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவலைத் தடுக்க, நேற்று மாலை 6 மணி முதல் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் சாலையோர தடுப்பில் லாரி மோதிய விபத்தில், 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா : ஏப்ரல்-10

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா – புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினிலாரி சென்று கொண்டிருந்தது. கந்தாலா பகுதி அருகே லாரி வந்த போது அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த 17 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.