தேசம்

‘பாபர் மசூதி இடிப்பு’ டூ ‘அயோத்தி தீர்ப்பு’ பாஜகவின் திணிப்பா?

1992 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். உத்தரபிரதேசத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பாபர் மசூதி, டிசம்பர் 6 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார், ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கருத்து. இதனையடுத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் வெடித்தன. இதன் பின்பு இந்து அமைப்பினரும், முஸ்லிம் அமைப்பினரும் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்துக்காக நீதிமன்றம் சென்றனர். அப்போது முதல் இந்த வழக்கு ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கு’ என்றே பத்திரிகைகளாலும் ஊடகங்களாலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக இதனை ‘அயோத்தி வழக்கு’ என்று அனைத்து பத்திரிகைகளும் எழுதி வருகிறது. எங்கிருந்து, எப்படி இந்த பெயர் மாற்றம் வந்தது என்று பார்த்தால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் எனத் தெளிவாகவே தெரிகிறது.

Image result for rss and babri masjid

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே பெரும்பாலான ஊடகங்களும் பத்திரிகைகளும் பாஜக புகழ் பாட ஆரம்பித்துவிட்டன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ‘மோடி தான் பாஜக’ என்ற மாயையை பரப்பி வந்தனர். மோடியும் அமித்ஷாவும் தான் பாஜகவின் இரு கண்கள் என்றும் ஊடகத்தினர் பலர் புகழ்பாடிக்கொண்டே இருந்தனர். இதுமட்டும் இல்லாமல் அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் என அனைத்துமே மோடி, அமித்ஷாவின் எண்ணங்களின் அடிப்படையிலேயே ஊடகங்களில் வெளியாகின. இதே நிலைதான் ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கு’, என கூறப்பட்டு வந்ததை ‘அயோத்தி வழக்கு’ என பெயர் மாற்றம் வரவும் வழி வகுத்தது எனலாம். இந்தியாவை ஆள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஊடகத்துறையையும், மோடி, அமித்ஷா இருவரும் நேரடியாகவே தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பல வழக்குகள் பெயர் மாறியது, இன்னும் சில வழக்குகள் காணாமலே போனது. வழக்குகள் மட்டுமின்றி வரலாற்றுக்கும் இதே நிலைதான்.

Image result for rss and bjp

ஊடகங்களும் பத்திரிகைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பல அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வந்தனர். நாட்டில் நிலவி வரும்  உண்மை நிலையை மறைத்து மோடி அரசை மிகைப்படுத்தி எழுதி வருவதாக அவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இவ்வாறாக கூறினார். “இதற்கு முன்பெல்லாம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்றுதான் செய்திகள் வரும், ஆனால் தற்போது அயோத்தி வழக்கு என்றே” செய்திகள் வருகிறது என்றார். ஊடகவியலாளர்கள் மத்திய அரசின் வழியாக பல நெருக்கடிகளையும் மிரட்டல்களையும் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பதையும் இதில் இருக்கும் அரசியலையும் நாம் தான் புரிந்துக்கொள்ள வேண்டும்.

Image result for தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

ஒரு வழியாக ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கு’ அதாவது சர்ச்சைக்குரிய ‘அயோத்தி நில வழக்கு’ தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறப் போவதையடுத்து தீர்ப்பு நிச்சயம் வெளிவந்துவிடும். தீர்ப்பு எந்த பிரிவினருக்கு சாதகமாக இருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது, போலீசாரும் துணை இராணுவ படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம்  சில தினங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடனும்  முஸ்லீம் தலைவர்களுடனும் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆலோசனை நடத்தியுள்ளார். தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அனைவரும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பிரதமர் மோடியும் அயோத்தி தீர்ப்பு குறித்து பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் சர்ச்சையான கருத்தை பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இதனால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் ’27ஆண்டுகளாக’ நிலவி வந்த சர்ச்சைக்குரிய இடம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்காக மொத்த இந்தியாவுமே காத்திருக்கிறது என்பதை அறிந்து நீதிபதிகளும் அரசும் செயல்பட வேண்டும்.

P.அப்துல் ரஹ்மான்

Tags
Show More

Related News

Back to top button
Close