சிறப்பு கட்டுரை

மஹாராஷ்டிரா – பாஜகவின் துல்லிய தாக்குதல்!

நிச்சயம், சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்து திருமணம் நடைபெறவிருக்கும் தினத்தன்று, மாப்பிள்ளை மாறி, திடீரென புதிதாக ஒருவர் மாப்பிள்ளையாக மணமேடை ஏறுவார். இதுபோன்ற காட்சிகள் சினிமாவில் அடிக்கடியும், நிஜ வாழ்வில் அரிதாகவும் நிகழும். ஆனால் அரசியலில் இதுபோன்ற அதிசய நிகழ்வொன்று மஹாரஷ்டிராவில் நடந்துள்ளது. நேற்றிரவு வரை சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று காலை எல்லாமே தலைகீழாக போய்விட்டது. யாருமே எதிர்பாரத வண்ணம் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுள்ளார், பாஜகவிற்கு ஆதரவு அளித்ததோடு துணை முதல்வர் பதவியை தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளார். நேற்றிரவு வரை முதல்வர் என்ற கனவோடு வலம்வந்துக் கொண்டிருந்த சிவசேனாவின் உத்தவ் தாக்ரேயும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்க வாய்ப்பில்லைதான். இவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே தனது மொத்த பலத்தையும் இழந்து நிற்கும் காங்கிரஸுக்கும் இது பேரிடியாக அமைந்திருக்கும்.

மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 54 இடங்களும் கிடைத்தன. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவையென்ற நிலையில் பாஜக – சிவசேனா கட்சிகள் மொத்தமாக 161 இடங்களை வென்றிருந்தன. இதனால் மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணியில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட குடுமிபிடி சண்டையால் இந்தக் கூட்டணி தகர்ந்தது. இதையடுத்து மஹாராஷ்டிரா ஆளுநர் பாஜகவை முதலிலும், இரண்டாவதாக சிவசேனாவையும், அடுத்ததாக தேசியவாத காங்கிரஸையும் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் எந்த கட்சியும் தனது பெரும்பான்மையை நிரூபிக்காததால் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் ஆளுநர்.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், இதன் பின்னரும் தொடர்ந்து தங்களது பேச்சு வார்த்தையை தொடர்ந்தனர். அதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனால் இறுதியான ஒரு முடிவு ஏற்பட்டு, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது, உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று சரத் பவார் தெரிவித்தார். இதே கருத்தையே சிவசேனாவும், காங்கிரஸ் கட்சியும் தெரிவித்தன. ஆனால் இதெல்லாம் இன்று காலையே கானல் நீராகிப் போனது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு அளித்ததையடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ், சிவசேனா கட்சி உட்பட சரத் பவாரும் பாஜகவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பாஜக தொடர்ந்து குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாகவும், ஜனநாயக முறையில் செயல்பவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் “மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அஜித் பவார் ஆதரவு அளித்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவே தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி முறை மட்டுமின்றி எதிர்க்கட்சிகளை சிதறடிப்பதிலும் கடும் அராஜக போக்கை பாஜக கடைபிடித்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் சட்டசபையில் தங்களது பலத்தை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடிவதற்குள்ளாகவே மாப்பிள்ளையை மாற்றத் தெரிந்த பாஜகவிற்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வழி தெரியாமலா இருந்திடும்!

Show More

Related News

Back to top button
Close