தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

தூத்துக்குடி போராட்டத்தின் போது, தீய சக்திகள், சமூக விரோத சக்திகள் மக்களிடையே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி : மே-27

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை முதல் நீக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, கடந்த 21ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, போராட்டத்தின்போது சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின் போது, படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்ததால் வன்முறை ஏற்பட்டது என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, போராட்டத்தின் போது, தீய சக்திகள், சமூக விரோத சக்திகள் மக்களிடையே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். குடிநீர், பால் தட்டுப்பாடு நீக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு பேருந்துகளைப் போல, தனியார் பேருந்துகளும் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை : மே-27

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க தூத்துக்குடி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் பார்த்ததால், எந்த பயனுமில்லை என்று கூறினார். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தினால், 10 மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி திறப்பு

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிதாகக் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதியை தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் இன்று திறந்து வைத்தார்.

சென்னை : மே-27

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையின் வைரவிழாக் கொண்டாட்டத்தின்போது, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான விடுதிக் கட்டடத்துக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த விடுதியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியில் 60 அறைகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கிக் கொள்ளவும், 8 அறைகள் தமிழகத்தைப் பார்வையிட வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 250 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கமும் இந்த விடுதியில் உள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ஐந்து நாட்கள் இந்த விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்றும் ஒரு நாள் வாடகை முந்நூறு ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவைச் சட்டப்பேரவைச் செயலகத்தின் இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது

தூத்துக்குடி கலவரத்தை திசைத்திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை : மே-27

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பத்தான் ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், உணவுக் குறிப்பு மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றை ஜெயலலிதா குறித்து வைப்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.

நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

டெல்லியை உ.பி மாநிலத்தின் மீரட் நகருடன் இணைக்கும் 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவில் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.

டெல்லி : மே-27

டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை, 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் முதல்கட்ட பாதையை இன்று காலை பொத்தானை அழுத்தி, திறந்து வைத்த பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். இதனைத்தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சாலை வழியாக பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மொத்தம் 135 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் நெடுஞ்சாலை வழியாக  டெல்லியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

டெல்லி : மே-27

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிதர் ஜவஹர்லால் நேரு கடந்த 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்த 54-வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜவஹர்லால் நேருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறாதது வெட்கக்கேடானது

தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறாதது வெட்கக்கேடானது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி : மே-27

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி சம்பவத்திற்கு பிரதமரோ அல்லது மத்திய அமைச்சர்களோ நேரில் வந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடி நேரில் ஆறுதல் தெரிவிக்காதது வேதனைக்குரியது என்று தெரிவித்த மு.க. ஸ்டாலின், இதுவே பாஜகவின் 4 ஆண்டு கால சாதனை என்று கூறினார். தூத்துக்குடியில் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்தது கபடநாடகம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை 14-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 14-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை : மே-27

சென்னையில் நேற்று 80 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோலின் விலை, இன்று காலையில், 16 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 11 காசுகளாக நிர்ணயம் செய்யப்ப்ட்டுள்ளது. இதேபோன்று, நேற்று 72 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையான டீசல், 17 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 91 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமென இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, ஆட்டோ, கால் டாக்சி மற்றும் பேருந்து கட்டணங்கள் உயரும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

சுயமரியாதையை விட்டு பதவியில் நீடிக்கப் போவதில்லை – குமாரசாமி

கர்நாடகாவில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடிக்கும் நிலையில், சுயமரியாதையை விட்டு பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

பெங்களூரு : மே-27

கர்நாடகாவில் துணை முதலமைச்சர் உள்பட 22 அமைச்சர் பதவியிடங்களை அளிக்க குமாரசாமி முன்வந்தபோதும், எந்தெந்தத் துறைகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டில் சில பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக சோனியா மற்றும் ராகுலை சந்திக்கப் போவதில்லை தெரிவித்த அவர், தமது அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும் கூறினார். பிரச்சனையைத் தீர்க்க தாம் முயன்று வருவதாகவும், அதே நேரத்தில் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து விட்டு பதவியில் நீடிக்க முடியாது என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

முன்னதாக, குமாரசாமியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, மாநிலச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். நேற்று மாலை ராகுல்காந்தியை சந்தித்து இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதித்தபோதும், முடிவு எதுவும் எடுக்கப்படாததால், அவருடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகின்றனர்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் – பக்தர்கள் சுவாமி தரிசனம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் : மே-27

வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் சிறப்பு வாய்ந்தது. இச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஆழித்தேருக்கு எழுத்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேரடியில் இருந்து கீழரத வீதியில் புறப்பட்ட இந்த தேரோட்டம் ஆரூரா, தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அசைந்தாடியபடி புறப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட எஸ். பி தலைமையில் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.