Home Archive by category அரசியல்

அரசியல்

தமிழும் தேசிய மொழியாக இருக்கலாம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் கொள்கைகளை விவரிக்கும் பாத யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்தி திணிக்கக்கூடாது எனக் கூறும் சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியை திணிக்க முயன்றவர்தான் என கூறினார். நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், எந்தக் கட்சிக்கும் பேனர், கட் அவுட் வைக்க அனுமதியளிக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் இந்தி மொழி தொடர்பான கருத்து தவறாக பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தேசிய மொழியாக தமிழையும் அறிவிக்கலாம் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்று கூறியுள்ளார் நாட்டின் பொருாளதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அதிரடியாக வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது என கூறினார்.  ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும்போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்துக்கு நிர்மலா சீதாராமனுக்கு  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதனிடையே கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி , வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை GST வரி விதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் GST கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற GST கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், GSTசட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல எனக் தெரிவித்துள்ளார். GST தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை மத்திய அரசு விரைந்து அமைத்திட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டிலுள்ள மீனவ மக்களின் நலன் கருதி மீன் துகள்களுக்கு ஜனவரி 2019 முதல் முற்றிலும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதாரண மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான பொருட்கள், கைவினையாளர்களால் செய்யப்படும் பொருட்கள், சமய உணர்வு சார்ந்த பொருட்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சுபஸ்ரீ, ரகு ஆகியோர் பேனர் விழுந்து உயிரிழந்ததற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பேனர் விபத்துகள் நடப்பதற்கு பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறியுள்ளார். தவறைக் சுட்டிக்காட்டினால் நாக்கை அறுப்பேன் என்பதும், ஏறி மிதிப்பேன் என மிரட்டுவதும் அவர்களின் அரசியல் நாகரீகமாக இருப்பதாக கூறியுள்ளார். அச்சப்படாமல் அனைவரும் அரசின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 தலைவர்களை நிபந்தனையின் பேரில் வெளியிட ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் ஆகியோரை வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்துள்ளது. குறிப்பாக பரூக் அப்துல்லாவை ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு முன்வந்துள்ளது. இந்த உறுதிமொழி பத்திரத்தில் ஹூரியத் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் உள்ளிட்ட 5 தலைவர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் கி. வீரமணிக்கு மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு மையமும், மனிதநேய சங்கமும் இணைந்து நடத்தும் பெரியார் மனிதயே சுயமரியாதை மாநாட்டு அழைப்பிதழ் தனக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். செப்டம்பர் 21, 22 ஆம் தேதிகளில் வாஷிங்டனில் உள்ள ஹோமரின் கல்லூரி வளாகத்தில் உலக முழுவதும் இருந்து மனிதநேய பண்பாளர்களும், பகுத்தறிவாளர்களும் பங்கேற்று  பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புவது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இந்ந விழாவில் சமூக நீதிக்கான வீரமணி விருது உல்ரிக் நிக்லஸூக்கும், மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது கி. வீரமணிக்கும் வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பகுத்தறிவாளர்கள், மனிதநேய உணர்வாளர்கள் பங்கேற்று பெரியார் கொள்கை பற்றி முழக்கமிட இருப்பது திராவிட இயக்கத்துக்கு பெரிதும் புகழ் சேர்க்கும் நிகழ்வு என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மாநாடு வெற்றி பெறவும், விருது பெறுபவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து மத்திய அரசு  மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எல்.ஐ.சி. என்பது இந்தியா மீதான நம்பிக்கையின் மற்றொரு பெயர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொது மக்கள் தங்கள் கடின உழைப்பை  எல்.ஐ.சி. யில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பாஜக அரசு எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அவர்களின் நம்பிக்கையை சிதைத்து வருகிறது என அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி. இரண்டரை மாதங்களில், 57ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளதுதாக பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களே காரணம் என  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற டாக் ஜர்னலிசம் எனும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் எனவும் கூறினார்.  ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை, காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கியிருப்பதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பொருளாதாரம் குறித்து பேசிய அவர் பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களால், சமூக நல்லிணக்கம் தேய்ந்து வரும் நாட்டில், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என குற்றம்சாட்டினார். மேலும்  மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எது காரணம் என நாம் சிந்திக்க வேண்டும் எனவும், ஸ்வச் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் உண்மையிலேயே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் சசிதரூர்  தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இரயில்வே துறையில், காலியாக உள்ள  ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான  தேர்வு, தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றதை அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 62 ஆயிரத்து 907பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் ,அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் இரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது, இது கடும் கண்டனத்திற்கு உரியது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான தேஜஸில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார்.

இந்தியாவின் HAL நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் விமானத்தை விமானப்படையிலும், கடற்படையிலும்  பயன்படுத்த  முடியும். கோவா கடற்படை தளத்தில் கடந்த 13-ம் தேதி இந்த விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. குறைந்த தூரத்தில் தரையிறங்கும் சோதனையையும் தேஜஸ் வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில், கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.  தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு விமான படை தளபதி என். திவாரியுடன் அவர் பயணித்தார். இதன்மூலம், தேஜஸ் விமானத்தில் பயணிக்கும், நாட்டின், முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்தது.