Home Archive by category அரசியல் (Page 157)

அரசியல்

ரயில்வே ஹோட்டல் ஒப்பந்த முறைகேடு வழக்கில் லாலுபிரசாத் மனைவி ராப்ரிதேவியின் வீட்டில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பாட்னா : ஏப்ரல்-11

பாட்னாவில் உள்ள ராப்ரியின் வீட்டில் சில ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர். 7 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் ராப்ரி மற்றும் அவரது மகனும் பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2006-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வேக்கு சொந்தமான ஹோட்டல்களை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி : ஏப்ரல்-11

சென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பதி சென்ற அவர், நேற்றிரவு பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து, இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அதிமுக அரசு கண்டிப்பாக பெற்றுத்தரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி : ஏப்ரல்-11

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடம் ஶ்ரீ உலகாண்டேஸ்வரி அம்பாள் கோவில் கோடைவிழாவை முன்னிட்டு, சிறிய மற்றும் பெரிய மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பந்தயத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினார்கள் என்று கூறினார். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அதிமுக அரசு கண்டிப்பாக பெற்றுத்தரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதிபட தெரிவித்தார்.

சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : ஏப்ரல்-11

ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து அனைவரையும் காவல் துறையினர் விடுவித்தனர். சென்னை எழும்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்த, சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சென்னை : ஏப்ரல்-10

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி மறுத்தும் தமிழக அரசு அறிவித்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து இருக்கிறது என்று வந்துள்ள செய்தியும் பாராட்டுக்கு உரியதாகும்.

கடந்த 32 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மறியல், உண்ணாவிரதம், நடைப்பயணம் என்ற பல போராட்டங்களை நடத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்தும், நான் தொடர்ந்த வழக்கில் 2010 ஆம்  ஆண்டு செப்டம்பம் 28 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்றேன்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அதற்குத் தடை வாங்கியது. உச்சநீதிமன்றத்தின் 36 அமர்வுகளில் தொடர்ந்து நானும், வழக்கறிஞர் தேவதாசும் பங்கேற்றோம்.

அந்த நீதிமன்றத்தில் நான் மிக வலுவான வாதங்களை வைத்தபோதிலும் 2013 ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதன்பின்னர் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் தொடுத்த வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

நாசகார ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்து குமரெட்டியாபுரம் கிராமத்து மக்களும், சுற்றுக் கிராம மக்களும் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து அனுமதி இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளிக்கவில்லை என்றும் வந்துள்ள செய்தி குமரெட்டியாபுரம் களம் அமைத்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் விருப்பமும், எனது நிலைப்பாடும் ஆகும்.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர், சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று, கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அரசியல் கட்சிகளும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவேரி மீட்புக்குழு, மே 17 இயக்கம் ஆகியவை அமைப்புகளும் அறிவித்துள்ளன. இதனால், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி சாலை, பாரதி சாலை, மெரினா கடற்கரை சாலை என அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 4-வது நுழைவு வாயிலில் பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு  திரட்டவும் மதுரை, தேனி    மாவட்டங்களில்  நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 10-ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை கூடலூர் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்பம் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம், நியூட்ரினோ திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயற்கையை அழித்து விட்டு அணு ஆராய்ச்சிக்காக மலையை குடைந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு துடித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நியூட்ரினோ அணுகுண்டுக்கு சமமான நாட்டை அழிக்கக்கூடிய ஒரு திட்டம் என்று தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 4ஆம் நாளாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார்.

திருவாரூர் : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 7ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கிய இந்த பயணம் 4ஆம் நாளான இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இருந்து 4ஆம் நாள் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி வழியாக பவித்திர மாணிக்கம் சென்றார். இன்றைய பயணத்தில் குளிக்கரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். திருவாரூரில் தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலினின் இன்றைய பயணம் மாலையில் திருத்துறைப்பூண்டியில் நிறைவடைகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி,  அப்பகுதி கிராம மக்கள் 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி : ஏப்ரல்-10

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம் , மடத்தூர், சில்வர்புரம்  உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு தாம் எதிரி என்றும் அறிவியலுக்கு எதிரி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-வது நாளாக கம்பம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தான் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார்.