Home Archive by category அரசியல் (Page 2)

அரசியல்

எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து மத்திய அரசு  மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எல்.ஐ.சி. என்பது இந்தியா மீதான நம்பிக்கையின் மற்றொரு பெயர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொது மக்கள் தங்கள் கடின உழைப்பை  எல்.ஐ.சி. யில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பாஜக அரசு எல்.ஐ.சி. பணத்தை நஷ்டம் அடையும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அவர்களின் நம்பிக்கையை சிதைத்து வருகிறது என அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி. இரண்டரை மாதங்களில், 57ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளதுதாக பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களே காரணம் என  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற டாக் ஜர்னலிசம் எனும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் எனவும் கூறினார்.  ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை, காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கியிருப்பதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பொருளாதாரம் குறித்து பேசிய அவர் பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களால், சமூக நல்லிணக்கம் தேய்ந்து வரும் நாட்டில், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என குற்றம்சாட்டினார். மேலும்  மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எது காரணம் என நாம் சிந்திக்க வேண்டும் எனவும், ஸ்வச் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் உண்மையிலேயே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் சசிதரூர்  தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இரயில்வே துறையில், காலியாக உள்ள  ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான  தேர்வு, தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றதை அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 62 ஆயிரத்து 907பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் ,அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் இரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது, இது கடும் கண்டனத்திற்கு உரியது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான தேஜஸில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார்.

இந்தியாவின் HAL நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் விமானத்தை விமானப்படையிலும், கடற்படையிலும்  பயன்படுத்த  முடியும். கோவா கடற்படை தளத்தில் கடந்த 13-ம் தேதி இந்த விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. குறைந்த தூரத்தில் தரையிறங்கும் சோதனையையும் தேஜஸ் வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில், கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.  தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு விமான படை தளபதி என். திவாரியுடன் அவர் பயணித்தார். இதன்மூலம், தேஜஸ் விமானத்தில் பயணிக்கும், நாட்டின், முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்தது.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக கூறியுள்ளார். முதலமைச்சரிடம் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பழைய முறையே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு செயல்படும் என்று கூறிய செங்கோட்டையன், இந்த இடைவெளியில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராவதற்கு 5,8 பொதுத்தேர்வுகள் அவசியம் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்றார். பொதுத்தேர்வால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் செங்கோட்டையன் உறுதிபடத்தெரிவித்தார்.

திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ராய்பேட்டை ஓய்.எம்.சி.ஏ திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில், கட்சிப் பணிகள், கட்சியின் சட்டத்தில் திருத்தம், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் கருத்து ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த கட்சியும் இல்லாமல் பா.ஜ.க மட்டும் இருக்க வேண்டும் என அமித் ஷா எண்ணுகிறாரா ? என வினவினார். மொத்தத்தில் சர்வாதிகார பாதையை நோக்கி இந்தியாவை மோடி அரசு கொண்டு செல்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். சமஸ்கிருத்தை விட மூத்த மொழி தமிழ் என்று பிரதமர் மோடி கருதினால், தமிழை முதலில் ஆட்சி மொழியாக்கட்டும் என்றார்.  அதைவிடுத்து, செத்து போன சமஸ்கிருதத்தை ஏன் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என அவர் வினவினார். ஹந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் வரும் 20-ம் தேதி நடைபெறும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் வைகோ கூறினார்.

இந்தி திணிப்பை எதிர்த்து 20-ஆம் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஹிந்தியை எந்த நிலையிலும் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார். இதனை ஏற்று வரும் 20-ந் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.  எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதனை திமுக எதிர்க்கும் என்றும் ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

பேனர் விவகாரத்தில் பொதுமக்களும், பிளக்ஸ் பேனர் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதித்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கான நகைக்கடன் சலுகையை ரத்து செய்யக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட மேலிட பார்வையாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளுக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளுக்குக் கட்சி வேறுபாடின்றி அனைத்துப் பிரிவினரும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். கடுமையான அபராதத் தொகையால் முதலில் அதிர்ச்சியடைந்த மக்கள், எல்லாவற்றையும் விட மனித உயிர்களின் பாதுகாப்பு முதன்மையானது என்பதை உணர்ந்து கொண்டதால் இப்போது அந்த சட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை பல மாநிலங்கள் எதிர்ப்பதாகச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாக  நிதின் கட்கரி குறிப்பிட்டார். சாலை விதிமீறலுக்கு அபராதமாகப் பெறப்படும் தொகையை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தியிருப்பதன் மூலம் விபத்துக்கள் பெருமளவில் குறையும் என நம்புவதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.