Home Archive by category அரசியல் (Page 3)

அரசியல்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஹிந்தி கட்டாயம் என கூறவில்லை என்றார். தமிழ்நாட்டில் அண்ணா சொன்னதுபோல இருமொழிக் கொள்கையே இருக்கும் எனவும், இதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையிலும், தமிழைப் பாதுகாக்கும் வகையிலும் அதிமுக அரசு செயல்படும் என அவர் கூறினார்.

நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தோ்தலை சரியான முறையில் எதிர்க்கொண்டு வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலை முறைறப்படி  நடத்தியுள்ளதாகவும், அதேபோல், விரைவில் உள்ளாட்சித் தோ்தலையும் முறைப்படி நடத்தி முடிப்போம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான DK சிவக்குமார் மீது அமலாக்கத்துறை 200 புகார்களை பெற்றுள்ளது.

டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கடந்த 3-ந் தேதி கைது செய்தது. அவரை அக்டோபர் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிவகுமார் மீது  சுமார் 200 புகார்களை அமலாக்க இயக்குநரகம் பெற்றுள்ளது. புகாரின் நம்பகத்தன்மையை தீர்மானிக்க அவற்றை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த புகார்கள் அனைத்தும், வீடு கட்டும் திட்டத்தில், முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், அவர்கள் முதலீட்டை இழந்ததாகக் குற்றம்சாட்டி உள்ளதாகவும் அமலாக்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி.கே.சிவக்குமார் குடும்பத்தினர் 20 வங்கிகளில் 317 வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். இந்த கணக்குகள் 46 நபர்களின் பெயரில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  பணத்தின் வரவு செலவு விவரங்களை அமலாக்கத்துறை  ஆராய்ந்து வருகிறது.

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு இன்று சென்று ஸ்டாலின், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என கட்சித் தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ‘பல கட்சி ஜனநாயக முறை’ தோற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ‘பல கட்சி ஜனநாயக முறை’ தோற்றுவிட்டதோ என மக்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளதாக கூறினார். பல கட்சி ஜனநாயக முறையால் இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது என்றார் அவர். பல்வேறு நாடுகளில் உள்ள பல கட்சி முறைகளை ஆராய்ந்து பார்த்த பிறகே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த முறை சேர்க்கப்பட்டது என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அரசு இயந்திரம் முடங்கி இருந்ததாக அவர் கூறினார். சிலர் 30 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்து ஒரு பெரிய முடிவை மட்டுமே எடுப்பார்கள், ஆனால் தங்கள் அரசு 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 50 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது என அவர் தெரிவித்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு ஒரே நாடு, ஒரே கட்சி என்பதை வலியுறுத்தும் வகையில் இருப்பதால் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

இந்தி திணிப்பை எதிர்த்து வரும் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு வருமாறு திமுக-வினருக்கு அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக மகிழ்ச்சிக் கடலில் நீந்தி மனம் மயங்கிடும் இயக்கமல்ல; மக்களின் நலன் காக்கும் அறப்போர்க் களத்தில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம் என கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, அதேநேரம், எந்த மொழியும் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த விடமாட்டோம் என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அன்னைத் தமிழை காப்பது தான் நமக்கு பெரும் மகிழ்ச்சி, அதற்கான போராட்டமே நமக்கு திருவிழா என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் அடையாளமாக இந்தி தான் இருக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் பேச்சு நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்தி என்ற ஆதிக்க அணுகுண்டைக் கொண்டு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதீர்கள் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோல்வி என்ற அமித்ஷா கருத்துக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறித்து, நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி பா.ஜ.க. நகர்த்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இதனை மறுக்கும் பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், அமித் ஷா கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல என்கிறார்.

மாவட்ட செயலாளர் கைதைக் கண்டித்து சென்னையில் மதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிமுக தலைமையகமான தாயகத்தில் இருந்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஊர்வலமாகச் சென்ற மதிமுக-வின் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மாவட்ட செயலாளர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, சிறுக சிறுகச் சேகரித்து மாநாட்டை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தியதாகக் கூறினார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசு அடக்குமுறையை ஏவிவிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்சி மன்றக்குழு செயலாளர் DRR செங்குட்டுவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், பாவை மகேந்திரன், பார்த்திபன், டி.சி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தீர்மானக்குழு செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மாநில மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன், கவிஞர் மணிவேந்தன் உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியாரின் 141-வது பிறந்நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் பெரியாரின் திருவுருப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், திமுக தலைவர் ஸ்டாலினும், அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் பிறந்நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் மற்றும் முகநூலில் அவரது பொன்மொழிகளை ஏராளமானோர் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு தலைவர்கள் பவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2-வது முறையாக பிரதமராக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள மோடி, இன்று 69-வது பிறந்தநளை கொண்டாடுகிறார். குஜராத்தில் சூழலியல் சுற்றுலா மையத்துக்கு சென்ற அவர் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார். இதனையொட்டி குஜராத் சென்று தனது தாயிடம் அவர் வாழ்த்து பெற்றார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் மதிப்பு கூடியிருப்பதாகவும், நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மிகச் சிறப்பாக கட்டியெழுப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், மற்றவர்களுக்கு முன்னோடியாக பிரதமர் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடவுளின் ஆசிர்வாதத்தோடு, நீண்ட ஆயுளுடன் பொதுமக்களுக்கு இன்னும் நீண்ட காலம் பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுகம் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளத்த அவர், விவசாயக் கடன் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதைச் செய்யாமல், முறைகேடு நடைபெறுவதாகக் கூறி நகைக்கடன் வழங்குவதை நிறுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேட்டுள்ளார்.