Home Archive by category உலகம்

உலகம்

பெருநிறுவனங்களின் நலனுக்கு உதவுகிறது குடியரசு கட்சி: ஒபாமா

எளியோரின் நலனுக்குப் பாடுபடுவதாகக் கூறும் குடியரசுக் கட்சியினர் பெருநிறுவனங்களின் நலனுக்கு உதவுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

                அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து லாஸ்வேகாசில் பாரக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார்.

                அப்போது, தனது பெயரைக் குறிப்பிடுவதை டிரம்ப் நிர்வாகம் தவிர்த்து வருவதாகத் தெரிவித்தார். எளியோருக்குப் பாடுபடுவதாகக் கூறிய குடியரசுக் கட்சியினர் பெருநிறுவனங்களின் நலனுக்கு உதவுவதுடன், மக்களிடையே பிரிவினையை விதைப்பதாகவும் தெரிவித்தார்.

உலகின் மிக நீளமான கடல்பாலம் திறப்பு

   ஹாங்காங்கில் இருந்து சீனா வரையிலான உலகின் மிக நீளமான கடல்பாலம் இன்று திறக்கப்படுகிறது.

                55 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் இந்தப் பாலம் கடந்த 2016ம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்ட போதும், இந்த ஆண்டில் தான் அது முழுமை பெற்று திறக்கப்படுகிறது. சுமார் 200 கோடி டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இப்பாலத்தை சீன அதிபர் சீ ஜின் பிங் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார்.

இதனால் சீனாவில் உள்ள மக்காவ் நகரில் இருந்து ஹாங்காங் செல்லும் பயண நேரம் மூன்று மணி நேரத்தில் இருந்து முப்பது நிமிடங்களாக குறைகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தப் பாலம் வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிளஸ் மூடல்

பயனாளர்களின் தகவல்களை கூகுள் திருடுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்றில் கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுவதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ், பேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டியாக 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்: மெங்

      விதி மீறல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இண்ட்டர்போல் தலைவர் மெங், லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.

                இண்டர்போல் தலைவராக பணியாற்றி வந்த மெங் ஹாங்வெய், அண்மையில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, மெங் மாயமாகவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டு சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்தது.

                இந்நிலையில், லஞ்சம் வாங்கியதை மெங் ஒப்புக்கொண்டதாகவும், பொது பாதுகாப்புத்துறை துணை அமைச்சரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

                முன்னதாக, இண்டர்போல் தலைவர் பதவியை மெங் ராஜினாமா செய்ததாக ஃபிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இண்ட்டர்போல் பொதுச்செயலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்தாண்டிற்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

      பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டவ்ஸ்  (Nordhaus ) மற்றும் பால் ரோமர் (Paul) உள்ளிட்ட இரண்டு விஞ்ஞானிகள் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற  தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பருவகால மாற்றத்துடன் பொருளாதாரத்தை தொடர்புபடுத்திய ஆய்விற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என விருதுக்குழு தெரிவித்தது. பொருளாதாரத்திற்கான பரிசுடன் இந்தாண்டிற்கான அனைத்து நோபல் பரிசு குறித்த அறிவிப்புகளும் நிறைவடைந்துள்ளன. இந்தாண்டிற்கான நோபல் பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரெட் நோபலின் நினைவுதினத்தன்று நடைபெறவுள்ளது.

இந்தோனேசியா: 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மற்றும்சுனாமி தாக்குதலில் சுமார் 2000-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படைதெரிவித்துள்ளது.

வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில், கடந்த 28-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினார்.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுலவேசி தீவு பகுதியை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள், கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. குடியிருப்புகள், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அனைத்தும் கட்டிடங்களும் தரைமட்டமானது.

இதுகுறித்து தெரிவித்த இந்தோனேசியா தேசிய பேரிடர் மீட்பு படை, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிதான் 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி என கூறப்படுகிறது. அந்த சுனாமி தாக்குதலில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 3 நாள் சுற்றுப்பயணம் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

அங்கு  தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான்(Emomali Rahmon), பிரதமர் கோஹிர் ரசூல்சோடா(Kokhir Rasulzoda) ஆகியோரை ராம்நாத் கோவிந்த் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கி சூடு

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நடத்தப்பட்ட  இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தற்போது 3பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் பிரெட் கவனாக்  வெற்றி…

அமெரிக்க உச்சநீதிமன்ற பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

அமெரிக்க நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51 வாக்குகள் ஆதரவாகவும், 49 வாக்குகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தன. இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மயுங்-பாக்-கு 15 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மயுங்-பாக்-கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் லீ மயுங்-பாக் அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சியோல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மயுங்-பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசியல் நோக்கங்களுக்காக தன் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டதாக லீ தெரிவித்தார். அவருக்கு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட சாம்சங் நிறுவனமும் கூறியுள்ளது. தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெறும் 4-வது முன்னாள் தலைவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.