Home Archive by category உலகம் (Page 42)

உலகம்

மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் : ஏப்ரல்-12

மியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக பங்களாதேஷ்க்கு தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதல்களின்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரே சவக்குழியில் புதைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 ராணுவ அதிகாரிகள், 3 வீரர்களுக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் ரசாயன வாயுவை செலுத்தி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், அதனால், வாயில் நுரைதள்ளி பலர் உயிரிழந்திருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியா : ஏப்ரல்-12

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் ரஷ்யப் படையுடன் இணைந்து, அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், சிரியா ராணுவம் ரசாயன வாயுவை செலுத்தி தாக்குதல் நடத்தியிருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரசாயன வாயுத் தாக்குதலால், ஏராளமானோர் வாயில் நுரைதள்ளி உயிரிழந்திருப்பதாகவும், குழந்தைகள் உள்பட பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னார்வ சுகாதாரப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க, வீதிகளில் தண்ணீர் திருவிழா நடத்தப்பட்டது.

பிலிப்பைன்ஸ் : ஏப்ரல்-12

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பத்தின் தகிப்பில் தவிக்கும் மக்களை குதூகலப்படுத்த சான் ஜுவான் நகர நிர்வாகம் வீதிகளில் வரிசையாக பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, குழாய்கள் மூலம் தண்ணீரை நிரப்பி, அதில் குளித்து விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. கலகலப்பான இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி, தொட்டிகளில் குளித்து விளையாடினர்.

இந்நிலையில், தாய்லாந்தில் கொளுத்தும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சாங்கரன் எனும் நீர் விளையாட்டு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வண்ணப் பூக்கள் வரையப்பட்ட யானைகள் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரின் மீதும் நீரை துதிக்கையால் பீய்ச்சியடித்தது. அங்கிருந்தவர்களும் பதிலுக்கு பக்கெட் நீரைக் கொண்டு யானைகளின் மீது ஊற்றி விளையாடி மகிழ்ந்தனர்.

 

 

அல்ஜீரியா நாட்டில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த ராணுவ வீரர்கள் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஏப்ரல்-11 

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து, ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது, நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இலியுசின் 76என்கிற அந்த விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்திற்கான காரணம் குறித்தும், அதில் பயணம் செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில், அமெரிக்காவின் போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா : ஏப்ரல்-11

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருவதால், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன ராணுவம் அங்கு விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்காவும், தென் சீன கடல் பிராந்தியத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறது. பதட்டமான இப்பகுதியில், அண்மையில், சீனாவின் கடற்படையும், விமானப்படையும் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தென் சீன கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. போர்க்கப்பலில் இருந்த புறப்பட்ட F-18 ரக போர் விமானங்கள் 20 நிமிடங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, மீண்டும் கப்பலுக்குத் திரும்பின.

ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை 11வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சுவரொட்டி ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் சிரியாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த சுவரொட்டியில் உலகக்கோப்பை கால்பந்து மைதானத்தில் புதின் பேசிக் கொண்டிருப்பது போலவும், அவர் துப்பாக்கியால் குறி வைக்கப்பட்டிருப்பது போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த மசாஜோ நுனாகா என்ற 112 வயது முதியவரை, உலகின் வயது முதிர்ந்த மனிதராக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

ஜப்பான் : ஏப்ரல்-11

கடந்த 1905 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி அஷோரோ என்ற ஊரில் பிறந்த நுனாகோவுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கான இயற்கை வெந்நீர் ஊற்றுகளைக் கொண்ட ரிசார்ட்டை நடத்தி வந்த நுனாக்கோ, தற்போதும் அதில் குளிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நுனாகோ நடத்தி வந்த ரிசார்ட்டை தற்போது அவரது பேத்தி ஒருவர் நிர்வகித்து வருகிறார். 112 வயதான மசாஜோ நுனாகோவை உலகிலேயே வயது முதிர்ந்தவராக அங்கீகரிப்பதற்கான சான்றிதழை, ஜப்பானில் உள்ள கின்னஸ் அமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர். கின்னஸ் சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சியில், தனக்கு மிகவும் பிடித்த ஸ்ட்ராபெரி கேக்கை கேட்டு வாங்கி நுனாகோ சாப்பிட்டார்.

 

 

ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதற்காக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏப்ரல்-10 

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வெற்றி பெற, கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், லண்டனை சேர்ந்த நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை குழு முன்பு, ஃபேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜூக்கர்பெர்க், இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, அவர் அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், தங்களது பொறுப்பு குறித்து விரிவான கண்ணோட்டம் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.  

சிரியாவில் விமானப்படை தளம் மற்றும் இடிலிப் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியா : ஏப்ரல்-10

சிரியாவில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷிய ராணுவமும் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஹெஸ்பெல்லா என்ற குழுவும் உதவி வருகின்றன. சிரியாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க படைகளும் அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் அருகேயுள்ள ஹோம்ஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அரசு படைகளுக்கு ஆதரவாக, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வரும் ஈரானியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல், இடிலிப் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில், படுகாயம் அடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊதிய உயர்வு கோரி விமான நிலையப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 800-க்கும் மேற்பட்ட விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

ஜெர்மனி : ஏப்ரல்-10

ஜெர்மனியில் 6 விழுக்காடு ஊதிய உயர்வுகோரி விமான நிலையப் பணியாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிராங்க்பர்ட், மூனிச், கொலோன், பெர்லின் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.