Home Archive by category உலகம் (Page 48)

உலகம்

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அமெரிக்கா : ஏப்ரல்-08

அமெரிக்காவில் நியூயார்க் அருகே மன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் டவர் அடுக்குமாடி குடியிருப்பின் 50வது தளத்தில் திடீரென கரும்புகை எழுந்ததையடுத்து அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  இந்தத் தீ விபத்தில் படுகாயமடைந்து செயின்ட் லூகாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் 4 தீயணைப்பு வீரர்களும் படுகாயமடைந்தனர்.

சிலி நாட்டில் உள்ள சில்லான் எரிமலை அதிக அளவில் புகையை வெளியேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சிலி : ஏப்ரல்-08

உலகில் உள்ள அபாயகரமான எரிமலையில் ஒன்றாகக் கருதப்படும் சில்லான் எரிமலை கடந்த 2015-ஆம் ஆண்டு நெருப்பை வெளியிட்டதால், 3-ஆம் நிலையாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, 2-ஆம் நிலையாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, எரிமலையின் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 29 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல்-07

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடும் காசா பகுதியில் கடந்த சில நாட்களாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசாவின் தெற்கு பகுதியில், கடந்த 30ஆம் தேதி முதல் ஹமாஸ் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த போராட்டத்தின்போது, பாலஸ்தீன போராட்டக்காரர்கள் திடீரென டயர்களை எரித்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

 

 

ஊழல் வழக்கில்தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் ஜியூன்-ஹை 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக,  கடந்த 2013ஆம் ஆண்டில் பதவியேற்றவர்,  பார்க் ஜியூன்-ஹை.  சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக அரசின் கொள்கைகளை வளைத்ததாகவும்,  இதற்காக பெருந்தொகை லஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து பார்க் ஜியூன்-ஹை-க்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து பார்க் ஜியூன்-ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி,   பார்க் ஜியூன்-ஹை-க்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.  

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீனம் : ஏப்ரல்-06

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வலுத்து வருகிறது. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பு செய்த தங்கள் நிலங்களை, தங்களுக்கே வழங்கக் கோரி பாலஸ்தீன மக்கள் கடந்த வாரம் பேரணியாகச் சென்றபோது, இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாலஸ்தீன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துருக்கி : ஏப்ரல்-06

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஒஸ்மான்காசி பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் வீசிய மணல்புயல் காரணமாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனா : ஏப்ரல்-06

வடக்கு சீனாவில் உள்ள உள் மங்கோலியா மாகாணத்தில் மோசமான மணல்புயல் வீசி வருகிறது. இதனால், பகல் நேரத்திலும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. 2 மீட்டர் தூரத்தில் உள்ள பொருள்கள் மட்டுமே பார்வைக்கு தென்படுகின்றன. வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கூட இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. மணல்புயல் காரணமாக, ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான ரயில்கள் தாமதமாகி வருவதோடு, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு பகிரப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா : ஏப்ரல்-05

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்களை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி இந்த குழு முன்பு பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள் இங்கிலாந்து நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. திருடப்பட்ட தகவல்களில் பெரும்பாலனோர் அமெரிக்கர்கள் என்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மட்டுமே இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன என்றும் பேஸ்புக் நிறுவன மூத்த தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பெர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா : ஏப்ரல்-05

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க அரசு முடிவு செய்தள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள தீவிரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இஸ்லாமாபாத் : ஏப்ரல்-05

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள், அமைப்புகள் என 139 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐ.நா. பட்டியலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்த ஒசாமா பின்லேடனின் வாரிசு அய்மான் அல் ஜவாஹிரி முதல் இடம் பிடித்துள்ளார்.

மும்பை தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் கொன்று குவிக்கப்படுவதற்கு, பின்னணியில் இருந்து செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத்தின் கூட்டாளிகள் அப்துல் சலாம், ஜப்பார் இக்பால் ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.