Home Archive by category கல்வி

கல்வி

சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா? வைகோ கண்டனம்

இது குறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பக்கம் 168 இல், சாதி மற்றும் மோதலும்; ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு இதுபோன்று நாடார்குல மக்கள் மீது அவதூறு செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்று இருந்தது. அதனை நீக்க வேண்டும் என்று 2012 அக்டோபர் 26 இல் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன். மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கண்டித்தும், நாடார் மக்கள் மீது நஞ்சைக் கக்கும் பாடத்தை அறவே நீக்க வலியுறுத்தியும் 2012 நவம்பர் 2 ஆம் தேதி நாகர்கோவிலில், தலைமை அஞ்சலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அதே பாடம் இடம்பெற்று இருக்கிறது.

தமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு.

நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சி.பி.எஸ்.இ., பாடநூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

நாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடநூலில் நாடார் சமூக பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறித்துவ சமயத்தைத் தழுவியதாக சி.பி.எஸ்.இ. பாடநூலில்  நஞ்சை கொட்டி இருக்கிறார்கள்.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ. 9 ஆம் வகுப்புப் பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ் கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு இடம்பெறும்

நிகழ் கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு இடம்பெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் நிறுவன பங்களிப்போடு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த கையேடு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளுக்கு இந்த கையேடு வழங்கப்படவுள்ளதாகவும், இந்த 320 பள்ளி ஆசிரியர்கள் மூலம் மற்ற பள்ளிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த கல்வி ஆண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்படவுள்ள மூன்றாம் பருவ புத்தகத்தில் பிளாஸ்டிக் குறித்த பாடதிட்டம் இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை

நவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

          ஈரோடு மாவட்டம், நம்பியூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல்நிலையத்தின் புதிய கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரவுண்டான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பியூர் பகுதியில் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் 6முதல் 8ஆம் வகுப்புவரை உள்ள 3 ஆயிரம் பள்ளிகளில், நவம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துபள்ளிகளும் கணினிமாயமாக்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

                1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதேபோல், 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 10ஆம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சிபெறாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

                இதனைக் கருத்தில் கொண்டு உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அரசிடம் கேட்டுக்கொண்டார். அதனை பரிசீலித்த அரசு,வரும் கல்வியாண்டு முதல் துணை தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் வரும் 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்,ஏப்ரலில் நடப்படும் என்றும், தோல்வியடையும் மாணவர்களுக்கு  ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்துணைத்தேர்வுகளை ரத்து  செய்வதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று  முதல் செயல்படத் தொடங்கும்

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று  முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

                நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3 ஆயிரத்து200 ஆசிரியர் ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் இந்த பயற்சியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், அடுத்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முன்னர் வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயிற்சி வகுப்புகள் மொத்தம் 36 வாரம், விடுமுறை நாட்களில்  நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது என்றும் அமைச்சர் செங்கோட்டையன்  உறுதிபட தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை தமிழகம் புரிந்து வருகிறது: முதலமைச்சர்

மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை தமிழகம் புரிந்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டியில் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உருவாக்கப்பட்டு, கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார். மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை தமிழகம் புரிந்து வருவதாகவும் மருத்துவ துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  தமிழகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். முதற்கட்டமாக 292 கோடி ரூபாயில் 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டுசெல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரிநீரை எடுத்து சேலத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார். முன்னதாக இன்று காலை சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில்            முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

 

 

பள்ளி கல்வித்துறை சார்பில் நல்லது கெட்டது குறித்து படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படும் – செங்கோட்டையன்

பள்ளி கல்வித்துறை சார்பில் நல்லது கெட்டது குறித்து படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

                தலைமை செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பின் 14417 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், அதன் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்..

                சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும், 379 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் நல் ஆசிரியர் விருதுகளை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவுள்ளதாகவும் கூறினார். பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்  ரோட்டரி கிளப் மூலம்  செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                நாடு முழுவதும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

                 இதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் சுமார் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் சிலர் அவ்வப்போது தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்க உத்தரவிட்டு வந்தது.

                  இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ-மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக  தாக்கல் செய்த  மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,  முந்தையை ஆண்டுகளில் நீதிபதிகள், தனித்தனி மனுக்களின் மீது கூடுதலாக இடம் ஒதுக்கி அனுமதி வழங்கி இருந்தாலும், இப்போது அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என கூறியது.

                  மேலும் மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தனியாக கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், எனவே மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்த நீதிபதிகள், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தனியாக தாக்கல் செய்து கொள்ளலாம் என கூறி இருந்தனர்.

                இந்நிலையில்  சஞ்சனா, அகிலா என்ற இரு  மருத்துவ மாணவிகள் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக  சி.வி.காயத்ரி என்பவர் தொடர்ந்த மூல வழக்கு வரும் நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என கூறியுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்திட அழைப்பு – கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வளவு தான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், ‘என் பள்ளி இது’ என்ற எண்ணத்தை தன்இதயத்தில் ஏந்திய  நல்லோரின் துணை, அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும் என அவர் கூறியுள்ளார். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர்,வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாகவே மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.

கல்வி ஒன்றால் தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும் எனவும், அனைவரும் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை – மாநில அரசு ஒப்புதல்

              பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

                பஞ்சாப் மாநிலத்தில், புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அது இந்திய தண்டனை சட்டத்தில் 295 ஏஏ பிரிவு என புதிதாக சேர்க்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தத்துக்கு முதல் அமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மாநில அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பஞ்சாபில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்