Home Archive by category கல்வி (Page 12)

கல்வி

 

நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல்-19 

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷூ அணியக் கூடாது, பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது எனவும், பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கொண்டுவரும் பொருட்களை வைத்திருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

 

 

 

புதிய பாடத்திட்டத்தால் புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால், பாட புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோடு, ஏப்ரல்-17 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது ;-

பாடப் புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற பேச்சுகள் வருகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், “புதிய பாடத்திட்டம் கொண்டுவருவதால் புத்தகத்தின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, அந்தத் தொகை மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் என்கின்ற தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறு. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி தரத்தில் பாடத்திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறோம். புத்தகங்களை அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால், பாடப்புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால், அந்தப் புத்தகத்துக்காக அரசுப் பள்ளி மாணவர்களிடமோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமோ பணம் வசூல் செய்யப்பட மாட்டாது. இது எப்போதும்போல மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

9 ஆயிரத்து 300 அரசு காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி சொல்வது போல ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகள் தான் என்றால் அதில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதே அனைவரின் கேள்வியும்.

அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் 2016-17 -ம் கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், 3.50 லட்சம் மாணவர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு சீன மாணவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிக மாணவர்கள் பட்டியலில் இந்தியா, 1.86 லட்சம் பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இது 12.3 சதவீதம் அதிகமாகும். மொத்த வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.3 சதவீதமாகும். இந்திய மாணவர்களில் 56.3 சதவீதம் பேர் பட்டப் படிப்பை படிப்பதற்காகவே அமெரிக்கா வருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அமெரிக்க மாணவர்கள், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில், இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 4,438-ல் இருந்து 4,181 ஆக குறைந்துள்ளது.என கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

அதுபோல, மழை பெய்தால் விடுமுறை அறிவிப்பது குறித்து காலை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சொல்லி இருந்தனர்.

இன்று அதிகாலை ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஐந்து நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளின் ஆலோசனையின்படி பள்ளிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, 9 பள்ளிகள் தவிர்த்து இன்று சென்னையில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.