Home Archive by category சினிமா

சினிமா

நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்

 

 

தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே, தமிழில் `பாம்பே’ படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்’ படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே, தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோனாலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறவினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். சோனாலி பிந்த்ரே நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமசாமி படையாச்சியார் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

சுதந்திரப் போராட்ட வீர்ரும்,முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியார் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-29

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளை பெற்று நடிகர் திகலம் என்று மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார் நடிகை ஏஞ்சலினா ஜோலீ

ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ, ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார்.

ஈராக் : ஜூன்-18

ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள், 33 ஆயிரம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா.சபையின் மனித உரிமை ஆணையம் நிதி உதவியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் இன்று கைது

சேலம் பசுமைவழிச் சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். 

 சென்னை : ஜூன்-17

சேலம் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைந்தால், எட்டு பேரின் கையை வெட்டுவேன் எனப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக, அவர் மீது சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இன்று அதிகாலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற தீவட்டிபட்டி காவல்துறையினர், அவரை கைது செய்து சேலத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் இன்று வெளியானது

ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் இன்று வெளியானது. இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை : ஜூன்-07

நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள காலா திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ரோஹினி, பரங்கிமலை ஜோதி மற்றும் ஆலந்தூர் ரெமி ஆகிய திரையரங்குகளில் காலா திரைப்படம் அதிகாலை நான்கு மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலை 3 மணிக்கே திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், ரசிகர்கள் மேளம் தாளம் முழங்க, ஆடிபாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேபோல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 96 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் நல்ல வருவாயை ஈட்டித்தரும் என்று நம்பிக்கை உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் உள்ள எந்த திரையரங்குகளிலும் படம் வெளியாகவில்லை. காலை 10:30 மணிக்கு டிக்கெட் வழங்க வேண்டிய திரையரங்குகளில் தற்போது வரை வழங்கபடவில்லை. காலா படத்தினை வெளியிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் திரையரங்குகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி விவகாரத்துக்காக, கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல

காவிரி விவகாரத்துக்காக, கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-06

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே தான் கூறியதாக விளக்கம் அளித்தார். திரைப்பட வெளியீட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கர்நாடக பிலிம் சேம்பரே, படத்தை வெளியிட விடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி, படத்துக்கு பாதுகாப்பு தர கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார் ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி : மே-30

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கி ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்து, ஆறுதல் தெரிவித்தார்.

மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கிறார் டேனியல் கிரெய்க்

பிரபல துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் மீண்டும் நடிக்க டேனியல் கிரெய்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

மே-26

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படம் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாவில்லை. டேனியல் கிரெய்க் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு ஸ்பெக்ட்ரா என்ற படம் வெளியானது. அதனையடுத்து இனி, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என 50 வயதான டேனியல் கிரெய்க் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டேனி போயல் இயக்கத்தில் 5வது முறையாக ஜேம்ஸ் வேடத்தில் நடிக்க கிரெய்க் ஒப்புக் கொண்டுள்ளார். பாண்ட் 25 என்ற இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வர உள்ளது. முன்னதாக கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால் மற்றும் ஸ்பெக்ட்ரா உள்ளிட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை : மே-26

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், சசிகுமார், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன் மற்றும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜக அரசு குறுக்கீடு இல்லாமல், மாநில அரசு சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பா. ரஞ்சித், தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார்.

நடிகர் எஸ்.வி. சேகரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி : மே-22

நடிகரும், பா.ஜ.நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக, எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எஸ்.வி சேகரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்து, உத்தரவிட்டனர்.