Home Archive by category தமிழ்நாடு

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவைத்தனர்.

90 அடி வரை கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையானது அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் 120 நாட்களுக்கு ஆயிரத்து 944 மில்லியன் கன அடி வீதமும் அமராவதி பழைய ராஜவாய்க்கால் மூலம் 75நாட்களுக்கு 3 ஆயிரத்து 110 மில்லியன் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி பிரதான வாய்க்கால் மூலம் 75நாட்களுக்கு ஆயிரத்து 711 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை கணக்கில் கொண்டு தகுந்த இடைவெளியில் தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கூறப்படுள்ளது.

சென்னையை பொருத்தவரை  வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. முதல் 4 நாட்களுக்கு பிறகு 5-ந் தேதி விலை சற்று அதிகரித்த நிலையில் பின்னர் விலை சரிந்தது. இந்நிலையில் கடந்த 9-ந் தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது.  தொடர்ந்து  10 நாட்களாக  பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 37 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 75ரூபாய் 93காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 70 ரூபாய் 7 காசுகளாகவும் உள்ளது

 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகார் எழுந்ததையடுத்து இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழகள் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநரககம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதேபோல் பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்திருக்க வாய்புள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் படித்து வரும் 4 ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து உடனுக்குடன் மருத்துவக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி  மாணவர்கள் 4 ஆம் நாளாக வகுப்புகளைக் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியல் கட்டண உயர்வு, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வுகளை பொதுத்தேர்வாக மாற்றுவது உள்ளிட்டவைகளை கண்டித்து இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த திட்டங்களை கைவிட கோரி கண்டன முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், இதனை அரசு கண்டு கொண்ணவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக கூறினர்.

தமிழகத்தில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து முன்னேற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்குவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 265 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8, 310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றார். பூந்தமல்லி, மாதவரம், கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஐந்தருவி, மெயன் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடையச் செய்துள்ளது. நாள்தோறும் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் முடிந்த பிறகும் குற்றாலத்தில் கூட்டம் அலைமோதுவது மகிழ்ச்சியளிப்பதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கும் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து மூவாயிரத்து 250 கன அடியும், கபினியில் இருந்து 8 ஆயிரத்து 500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த கொலைகள் அனைத்தும், பழிக்கு பழியாக 15 ஆண்டுகள் பகைவுணர்வுடன் நிகழ்ந்துள்ளதும்  காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இக்குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க தவறியதாக தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களும், நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று 40 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக காவல்துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநயு உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும். இதனால், தமிழகத்தில் இன்று 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாத நிலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.