Home Archive by category தமிழ்நாடு (Page 208)

தமிழ்நாடு

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர், சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று, கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அரசியல் கட்சிகளும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவேரி மீட்புக்குழு, மே 17 இயக்கம் ஆகியவை அமைப்புகளும் அறிவித்துள்ளன. இதனால், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி சாலை, பாரதி சாலை, மெரினா கடற்கரை சாலை என அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 4-வது நுழைவு வாயிலில் பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு  திரட்டவும் மதுரை, தேனி    மாவட்டங்களில்  நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 10-ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை கூடலூர் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்பம் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம், நியூட்ரினோ திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயற்கையை அழித்து விட்டு அணு ஆராய்ச்சிக்காக மலையை குடைந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு துடித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நியூட்ரினோ அணுகுண்டுக்கு சமமான நாட்டை அழிக்கக்கூடிய ஒரு திட்டம் என்று தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 4ஆம் நாளாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார்.

திருவாரூர் : ஏப்ரல்-10

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 7ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கிய இந்த பயணம் 4ஆம் நாளான இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இருந்து 4ஆம் நாள் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி வழியாக பவித்திர மாணிக்கம் சென்றார். இன்றைய பயணத்தில் குளிக்கரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். திருவாரூரில் தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலினின் இன்றைய பயணம் மாலையில் திருத்துறைப்பூண்டியில் நிறைவடைகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி,  அப்பகுதி கிராம மக்கள் 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி : ஏப்ரல்-10

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம் , மடத்தூர், சில்வர்புரம்  உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 58-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு தாம் எதிரி என்றும் அறிவியலுக்கு எதிரி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி : ஏப்ரல்-10

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-வது நாளாக கம்பம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தான் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 55 ரூபாய் வீதம் நேரடியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : ஏப்ரல்-10

சர்க்கரை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான 20 சதவீத வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது, கரும்பு உற்பத்தியைப் பெருக்கும் வகையில், விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 55 ரூபாயை நேரடியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறையை மீறி, உள்நாட்டு சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக பிரேசில் உள்ளிட்ட சர்க்கரை ஏற்றுமதி நாடுகள் கூறுகின்றன. ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாக உதவுவது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைக்கு முரணான நடவடிக்கை அல்ல என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் உரியவாதங்களை தமிழகம் முன்வைக்கவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-10

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் சுயாட்சியை ஒருபோதும் அதிமுக அரசு விட்டுக்கொடுக்காது என்று கூறினார். பிரதமருக்கு பச்சைக் கொடி காட்டப்படும் என்பது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்து என்று கூறிய ஜெயக்குமார், விவசாயத்தை குறிக்கும் வகையிலேயே பச்சைக்கொடி காட்டுவோம் என ராஜேந்திர பாலாஜி கூறியதாக தெரிவித்தார். மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு தமிழகத்திற்கான நதியை குறைப்பதை ஏற்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஏப்ரல்-10

தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியினால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அப்பா வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகரைப் பார்த்து தமிழிசை பயப்பட வேண்டாம். என் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-09

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது ;- 

தமிழர்களுக்குப் பிரச்னை என்றால் குரல் கொடுக்கத் தயங்கமாட்டேன். அப்பா வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகரைப் பார்த்து தமிழிசை பயப்பட வேண்டாம். என் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது. அரசியல் தொடர்பான எந்தக் கனவும் எனக்கும் இல்லை. தமிழர்கள் பிரச்னைக்கு நடிகர்களால் தீர்வு காணமுடியாது. நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். காவிரி விவகாரத்தில் யாரையும் மிரட்டவில்லை. இளைஞர்கள் எழுச்சி திசை திரும்பிவிடக் கூடாது என்பதற்காக ஐபிஎல் போட்டியை எதிர்க்கிறேன். காவிரி பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு சத்யராஜ் தெரிவித்தார். 

நேற்று காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளில் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்த் திரை அமைப்புகள் ஒருங்கிணைந்து சென்னையில் நேற்று மௌனப் போராட்டத்தை நடத்தினார்கள்.  அதில் பேசிய சத்யராஜ், எந்த அரசாக இருந்தாலும் அஞ்ச மாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம். எந்த கெடுபிடிக்கும் அஞ்ச மாட்டோம். குரல் கொடுக்க தைரியம் உள்ளவர்கள், தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.

சத்யராஜின் பேச்சுக்குப் பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ராணுவத்திற்குப் பயப்படாதவர், ஐடி ரெய்டு வந்தால் எப்படிப் பயப்படுவார் என்பது தெரியும் என்றார்.

 

 

சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-09

சென்னை சேப்பாக்த்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில்  நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

போட்டி நடைபெற இருப்பதால், வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை போட்டியை காணச்செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமத்தித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது.