Home Archive by category தமிழ்நாடு (Page 229)

தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ   8-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-08

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளநிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  பொதுமக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு  திரட்டவும் மதுரை-தேனி    மாவட்டங்களில்  10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

8-ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை மேலசிந்தலைச்சேரியில் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கீழச் சிந்தலைச்சேரி, புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, அம்பாசமுத்திரம், கோட்டை மேடு, மேலரதவீதி, தேரடி உத்தமபாளையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தமிழ் திரையுலகினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை : ஏப்ரல்-08

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில், அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், விஜய் , சூர்யா, சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சங்க தலைவர் நாசர், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சுயநலமற்று போராடி வரும் அனைவருக்கும் தமிழ் திரையுலகம் தலை வணங்குகிறது என்று தெரிவித்தார். மாநில அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாசர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நமது உரிமையே தவிர பேராசை அல்ல என்று கூறினார்.

முன்னதாக, போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது என்று குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்றும் மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில், 2-வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணம் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் : ஏப்ரல்-08

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படாத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்றற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று தொடங்கி, கல்லணையில் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாள் நடைப்பயணம், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இன்று காலை துவங்கியது. இதில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஈச்சங்கோட்டை வழியாக செல்லும் இந்த நடைப்பயணத்தின் போது, சில்லத்தூர் பகுதி மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசவுள்ளார்.

இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி,  அப்பகுதி கிராம மக்கள் 56-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி : ஏப்ரல்-08

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம் , மடத்தூர், சில்வர்புரம்  உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 56-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கத்தை கைப்பற்றியுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் மீண்டும் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா : ஏப்ரல்-08

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-ஆம் நாளான இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், 69 கிலோ எடை பிரிவில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் மனு பாக்கர் தங்கப் பதக்கத்தையும், ஹீனா சித்து வெள்ளப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

இந்நிலையில், நேற்று பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார், 77 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வெங்கட் ராகுல் ரகாலா என்ற மற்றொரு வீரர் 85 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், இந்தியாவுக்கு மொத்தம் 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 6 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 9 பதக்கங்களுடன், பட்டியலில் இந்தியா மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பி.எஸ்.எல்.வி – சி 41 ராக்கெட்டை வரும் 12 ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.

ஆந்திரா : ஏப்ரல்-08

பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு மற்றும் வான்வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட சேவைகளுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் – 1செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி – சி41 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் வரும் 12 ஆம் தேதி காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை : ஏப்ரல்-08

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி எம்எல்ஏக்களின் மாதச் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயிலிருந்து இரண்டரை கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கேரிக்கை விடுத்ததால், ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த மாதம் ஒவ்வொரு அதிமுக எம்எல்ஏக்கும், 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை : ஏப்ரல்-08

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று எடியூரப்பா உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டியதில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்திருப்பதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், இதன் மூலம் காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் வழிபாடு நடத்தினார்.

திருப்பதி : ஏப்ரல்-08

திருப்பதிக்கு இன்று காலை குடும்பத்தினருடன் சென்ற காஜல் அகர்வால் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே நடந்து சென்ற அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய காஜல் அகர்வால், தெலுங்கு, தமிழில் படங்கள் நடித்து வருவதால் தரிசனம் செய்ய வந்ததாகவும், புனிதமான இடத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : ஏப்ரல்-08

தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியினால், 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.