Home Archive by category தமிழ்நாடு (Page 3)

தமிழ்நாடு

திருச்சி மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விரகனூரில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை அளிக்கும் வகையில் அக்ரி டெக் என்ற விவசாய கண்காட்சி நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட விவசாயம் சார்ந்த தொழில் நுட்ப பொருட்கள் , மற்றும் இயந்திரங்கள் தயார் செய்யும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை விவசாய கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

கோவையில், மாவட்ட ஆட்சியரின் ஓய்வு பெற்ற நேர்முக உதவியாளர் வீட்டில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் எக்ஸ் பிளாக் பகுதியை சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வருபவருமான வைத்தியநாதன் என்பருக்கு சொந்தமான வீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரின் ஓய்வு பெற்ற நேர்முக உதவியாளரான காந்தி வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சத்தம் கேட்டதை அடுத்து, காந்தி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டின் வாசலில் இருந்த பழமையான சந்தனமரத்தை இயந்திரம் மூலம் வெட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. காந்தி சத்தம் போட்டதை அடுத்து வெட்டிய சந்தன மரத்தை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

இயற்கை பேரிடர் காலங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தென்மேற்கு வங்க கடலில் கடும் காற்று மற்றும் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் சந்திரா நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தூத்துக்குடியில் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழுபேரில் ஒருவரான நளினி, தனது மகள் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் கோரி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன், வேலூர் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட நளினி தானே ஆஜராகி வாதிட்டார். பின்னர் அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 வேலூர் சிறையிலிருந்து நளினி பரோலில் வெளியில் வந்தார். வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் அவர் முன்வைத்த கோரிக்கை ஆகஸ்ட் 13-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகளை மேற்கொள்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்கியது. சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட வரைப்படத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது, அந்த திட்டத்தை தொடங்க மாட்டோம், என தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளதாகவும், அவசியமான திட்டம் என்கிறீர்கள், ஆனால் சுற்றுசூழல் அனுமதிக்கு தாமதம் ஆகும் என்கிறீர்களே என மத்திய அரசு வழக்கறிஞரிடம் வினவினர். 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு செப்டம்பர் 4ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசால் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினம் அன்று சிவனால் வரமுடியாத சூழ்நிலையில், தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார். சிவன் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 15-வது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று, நீர்வரத்து, வினாடிக்கு, 15ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து, வினாடிக்கு 14ஆயிரம் கனஅடியாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில், 15வது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 புள்ளி 53 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கன அடியிலிருந்து 13ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு, 10ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன்- 2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது என்றார். இனி வரும் நாட்களில் நீளவட்டப் பாதை சுற்றுவட்டப்பாதையாக சுருக்கப்படும் என குறிப்பிட்ட அவர், செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு சந்திராயன் -2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை ஆரம்பிக்கும் என்று தெரிவித்தார். நிலவில் சந்திராயன்- 2 லேண்டர் தரையிறங்கும் போது சந்திராயன் 2ன் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும் என்று அவர் கூறினார். சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்திராயன்- 2 நிலவில் தரையிறங்குவதை பார்வையிட மோடிக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சூரியன், செவ்வாய், வியாழன், கோள்களை ஆய்வு செய்ய எதிர்காலத்தில் செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இஸ்ரோவில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது, திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்த சிவன், வரும் காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்புகள் உண்டு என்றார்.

சீர்காழி அருகே சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக-வைச் சேர்ந்த கிராம தலைவரை தாக்கிய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில், விசைப்படகு மற்றும், சுருக்குமடி வலை மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், சுருக்கு மடி வலை மற்றும் சீனா என்ஜின் பன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சசரித்திருந்தார். இந்தநிலையில், பழையார் கிராமத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அதிமுக பிரமுகரும், கிராம தலைவருமான சுகுமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த சுருக்குமடி வலை உரிமையாளர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து சுகுமாரன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் 8 மீனவர்களை கைது செய்தனர். இதன்காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு நாட்டில் உள்ள அனைத்து குளங்கள் நீர்நிலைகள் கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் விளாச்சேரி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் அமைப்பதற்காக 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.