Home Archive by category தேசம்

தேசம்

ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 தலைவர்களை நிபந்தனையின் பேரில் வெளியிட ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் ஆகியோரை வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்துள்ளது. குறிப்பாக பரூக் அப்துல்லாவை ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு முன்வந்துள்ளது. இந்த உறுதிமொழி பத்திரத்தில் ஹூரியத் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக் உள்ளிட்ட 5 தலைவர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் புகார் வழக்கில் பாஜகவைச் சேர்ந்த சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சின்மயானந்துக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்து , வீடியோ வெளியிட்டிருந்தார்.  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம்  தாமாக முன்வந்து விசாரித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளர்  தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு சின்மயானந்த், அவர் மீது புகார் அளித்த மாணவி, அவரது தாயார், ஆண் நண்பர்கள், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம்   சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.  இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் மாணவி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார், இதற்கிடையே,  சுவாமி சின்மயானந்துக்கு திடீர்  உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை பாலியல் புகார் வழக்கில் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

திருப்பதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. படிகட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 5 மணி நேரமும், மற்றவர்கள்  12 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.  இந்நிலையில் திருப்பதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக திறந்த வெளியில் தங்கியிருந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கடும் குளிரும் வாட்டியதால் முதியவர்கள், குழந்தைகள் அவதி அடைந்தனர். இந்த மழையால் திருப்பதியில் உள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் உயரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சட்டவிரோத பணப்பதுக்கல், பணப்பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ ரெய்டில் கைது செய்யப்பட்ட சேகர்ரெட்டி மீண்டும் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணமதிப்பிழப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது 131 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஓ.பி.எஸ், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூற்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடைபெற்றது. அதில் சேகர் ரெட்டியின் சொத்துகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக சம்பாதித்தது என கணக்கு காட்டப்பட்டதையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் அனுமதி கடிதம் இன்றி டிஜிட்டல் பேனர் தயாரிக்க கூடாதென அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பேனர்கள் வைக்க தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்‌டார். இதையடுத்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பேனர்களை வைக்காமல் இருக்க உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  பேனர் தடை குறித்து உள்ளாட்சிதுறை இயக்குனர் மலர்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருமண மண்டப உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் உரிமையாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். ‌அதன்படி அரசு அனுமதி கடிதம் இன்றி பேனர்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்,  இந்தியாவின் பல்வேறு மாநில கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சியை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கிராமத்து கலைஞர்கள் கைவினை பொருட்களின் விற்பனை கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா,ஹரியானா உட்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை  சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். 180 க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து தங்களது பொருட்களை அவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் பட்டு, புதுச்சேரி கைவினைப் பொருட்கள், அரியானா சீருடைகள், ஆந்திரப் பிரதேசத்தின் படுக்கை விரிப்புகள், கேரள பாரம்பரிய உடை போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டடுள்ளன.  இந்த கண்காட்சி வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வந்த நிலையில், சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ரயில், பஸ், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. மேலும் ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன் உள்பட 4 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இமாச்சலப்  பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பரமணியன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர்பட், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைமை நீதிபதி முரளி கிருஷ்ணா ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இ- சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களில் விற்பனையாகும் இந்த இ-சிகரெட்டுகள் அமோகமான வரவேற்பை பெற்றது. நாளடைவில் இதன் பாதிப்புகள் தெரியவர, உலகின் பல நாடுகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் சில மாநிலங்களிலும் இதற்குத் தடை இருக்கிறது. இதையடுத்து இ- சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இ-சிகரெட் பயன்பாட்டால் மூளை வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதோடு மன அழுத்தம், பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இ-சிகரெட் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மோசடியாக பணம் பெற்ற 376 மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், இந்த திட்டத்துக்காக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பல மருத்துவமனைகள் மோசடியாக மத்திய அரசிடமிருந்து பணம் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மோசடியில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறிய ஹர்ஷவர்த்தன், 97 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக உறுதிசெய்யப்பட்ட 6 மருத்துவமனைகளிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.