Home Archive by category தேசம் (Page 101)

தேசம்

 

 

 

இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஏப்ரல்-09

இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டம் நுர்புர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து ஒன்று, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான சாலையில் செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான பேருந்தை கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 27 மாணவர்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.மேலும், காயமடைந்த 25-க்கும் அதிகமான மாணவர்கள் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

காவிரி நதிநீர் வழக்கில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,  காவிரி வரைவு செயல் திட்டத்தை தயாரித்து  மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி, ஏப்ரல்-09 

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற செயல்திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்என உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறுவார கால அவகாசம் முடிந்த பின்னர்,  தீர்ப்பில் கூறியுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  மனுத்தாக்கல் செய்தது. மே லும்,  உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுக்களை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மத்திய அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபின் அதனை  கட்டாயமாக செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே என்றும் நீதிபதிகள் வினா எழுப்பினர். பிறகு எதனால் தாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்ட நீதிபதிகள்நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். அதனால்தான் இதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டோம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டதாக விளக்கமளித்தனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை தயாரித்து,   மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள்கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும் என்று  ஆணையிட்டனர். மேலும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீதிபதிகளின் உத்தரவை ஏற்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.வேணுகோபால் உரிய காலத்திற்குள் வரைவு திட்டத்தை சமர்பிப்பதாக உறுதியளித்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது என்று கூறினார். மத்திய அரசு காலங்கடத்துவதை தடுக்கும் வகையில் உச்சநீமதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

 

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல் திட்டத்தை மே, 3ம் தேதிக்குள்  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, ஏப்ரல்-09

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது. இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின் இடைக்கால மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை  விசாரித்தது.

அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி கூறினார்.

காவிரி வரைவு செயல் திட்டத்தை மே, 3ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

 

 

எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தை நீர்த்து போக செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடந்து வருகிறது. கேரளத்தில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஏப்ரல்-09

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சட்டத்தைத் திருத்தக் கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் தலித் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தலித் அமைப்பினர் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் எஸ்சி எஸ்டி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையில் இயக்கப்பட்ட அரசு பேருந்து மீது சிலர் கல்வீசித் தாக்கியதில் அதன் கண்ணாடிகள் உடைந்தன. 

மாநிலம் முழுவதும், பல்வேறு முக்கிய சாலைகளில் தலித் ஆதரவாளர்கள் தடுப்புகளை போட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்திருந்தனர். பல இடங்களில் தார் டிரம்களை கவிழ்த்து விட்டுள்ளனர். கொச்சி, கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொச்சி அருகே மதவானா பகுதியில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான புளியரையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

 

அனைத்து நதிகளையும் இணைத்து, ஒரே வாரியத்தின் கீழ் நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்புகோரிய மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. 

டெல்லி, ஏப்ரல்-09

நாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து நதிகளையும், மத்திய அரசின் வாரியத்தின் மூலம் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் நிர்வகிக்க வாரியம் அமைப்பது என்பது சாத்தியமற்றது. நாட்டின் சில பகுதிகளில் நதிநீர் பிரச்னை உள்ளதால், அனைத்து நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர செல்வது ஏற்புடையதல்ல. இது நீதிமன்றத்தின் பணியும் அல்ல. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது என்பது எளிதான காரியம் அல்லது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர். 

 

 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ஜித்துராய் தங்கம் வென்றார். இந்நிலையில் இந்தியா 8 தங்கம், 3வெள்ளி, 4வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3 இடத்தில் உள்ளது.

ஏப்ரல்-09

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம்  வென்றார். 

இதையடுத்து, நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்திய வீராங்கனை மெஹுலி கோஸ் வெள்ளிப் பதக்கத்தையும், அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

முன்னதாக நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 105 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 

 

 

டெல்லியில் உள்ள சுல்தான்பூரி குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லி, ஏப்ரல்-09

டெல்லியின் சுல்தான்பூரி பகுதியில் உள்ள குடோனில் இன்று காலை 6 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 9 தீயணைப்பு வண்டிகளில் சென்ற தீயணைப்புப்படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மாமல்லபுரம் ராணுவ கண்காட்சியை பார்வையிட பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி, அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை  : ஏப்ரல்-08

சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 11ஆம் தேதி துவங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி தமிழகம் வருகிறார். காலை 9.30 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். பிறகு 10 மணிக்கு ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்று, 12.45 மணிக்குச் சென்னை விமான நிலையத்திற்கு அதே ஹெலிகாப்டரின் வருகிறார். பின்னர் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டட திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த விழாவிற்குப் பிறகு, 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்குத் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி வருகையை அடுத்து சென்னை, மாமல்லபுரம், விமான நிலையம் உட்பட நகரத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், திமுக மற்றும் பிற தோழமை கட்சிகள் பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரம், காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து அவருக்குக் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி வருகையின்போது, அவருக்கு எதிராக எந்த நிகழ்வுகளும் நடக்காமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ   8-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேனி : ஏப்ரல்-08

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளநிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  பொதுமக்களிடையே   விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு  திரட்டவும் மதுரை-தேனி    மாவட்டங்களில்  10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

8-ஆம் நாள் நடைபயணத்தை இன்று காலை மேலசிந்தலைச்சேரியில் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கீழச் சிந்தலைச்சேரி, புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, அம்பாசமுத்திரம், கோட்டை மேடு, மேலரதவீதி, தேரடி உத்தமபாளையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். சுட்டெரிக்கும் வெயிலில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தமிழ் திரையுலகினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை : ஏப்ரல்-08

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில், அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், விஜய் , சூர்யா, சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சங்க தலைவர் நாசர், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சுயநலமற்று போராடி வரும் அனைவருக்கும் தமிழ் திரையுலகம் தலை வணங்குகிறது என்று தெரிவித்தார். மாநில அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாசர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நமது உரிமையே தவிர பேராசை அல்ல என்று கூறினார்.

முன்னதாக, போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது என்று குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்றும் மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.