Home Archive by category தேசம் (Page 111)

தேசம்

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் இன்று மக்களவை சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி : ஏப்ரல்-06

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறாமல் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அறைக்குச் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அந்த அறையில் இல்லை. கால வரையின்றி போராட்டம் நடத்தப் போவதாக எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த  விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சைக்கிள் பேரணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்சனையை முன்வைத்து அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 22 ஆவது நாளாக முடங்கின.

டெல்லி : ஏப்ரல்-06

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 5-ம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடிய போது, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.

மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கானுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க ஜோத்பூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜஸ்தான் : ஏப்ரல்-06

அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்பட 5 பேர் மீது ஜோத்பூர் முதன்மை நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தெலங்கானா மாநிலத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா : ஏப்ரல்-06

தெலங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தில் பத்மாதி தண்டா கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள், அருகே உள்ள கிராமத்தில் மிளகாய் தோட்டத்துக்கு கூலி வேலைக்காக டிராக்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். வாடிப்பட்லா கிராமத்தைக் கடந்தபோது, ஒரு வளைவில் திரும்ப முடியாமல் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. டிராக்டரை நிறுத்த முயன்றபோதும், எதிர்பாராதவிதமாக அருகே இருந்த பாசன கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பெண்கள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தண்ணீரிலிருந்து வெளியேற முடியாமல் 12 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்புக் குழுவினரும் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.  டிராக்டரில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான ஜோடிகளுக்கு, ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

குஜராத் : ஏப்ரல்-06

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று, இந்த திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக வண்ணமயமான ஆடை அலங்காரத்துடன் மணமக்கள், மேளதாளம் முழங்க டிராக்டர்களில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் நடைபெற்ற திருமண விழாவில், 542 ஜோடிகளுக்கு அவரவர் பாரம்பரிய வழக்கப்படி, திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. ஏழை, எளிய பெண்கள் வரதட்சணை கொடுக்க இயலாமல் திருமணம் தள்ளிப் போகும் நிலையை மாற்றும் முயற்சியாக இந்த திருமண விழா நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை : ஏப்ரல்-05

காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு முறைப்படி வழங்குவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு கண்டித்து, கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா சாலையிலிருந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் உழைப்பாளர் சிலை அருகே தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரி உரிமை போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.

இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தால்,  அண்ணா சாலை – வாலஜா சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை : ஏப்ரல்-05

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், தொமுச உள்பட 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் ஆட்டோ தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னையில் தியாகராய நகரில் சுமார் 5 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், மருந்தகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தியாகராய நகரில் சுமார் 60 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. ஆனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், மாநகர அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், கடைவீதி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

சத்தியமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல், தினசரி காய்கறி மாக்கெட்டும் மூடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடினாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மதுரையில், மீனாட்சி பஜார், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், 70 சதவீதம் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 18 ஆயிரம் கடைகள் மற்றும் 350 மருந்தகங்களை அடைத்து, மத்திய அரசுக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தருமபுரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தார், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீத வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

 

காவிரி பிரச்சனையை முன்வைத்து அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. 

டெல்லி : ஏப்ரல்-05

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 5-ம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடிய போது, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று தெரிவித்தார்.

மான்வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் : ஏப்ரல்-05

ராஜ்ஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ”ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்” என்ற ஹிந்தி படப்பிடிப்பு நடைபெற்றபோது , பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான்,  சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து.  இந்த வழக்கில் சால்மான், நீதிமன்ற நிபந்தனையுடன் ஜாமின் பெற்று வெளிநாடு சென்று படபிடிப்புகளிலும் கலந்து கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட  இந்த வழக்கில் கடந்த மார்ச் 28-ம் தேதி அனைத்து சாட்சியங்களும், விசாரணைகளும் நிறைவடைந்தன. இதையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களான சல்மான் கான், சைஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். வழக்கின் தீர்ப்பை இன்று வாசித்த நீதிபதி தேவ்குமார் காத்ரி, மான்வேட்டை வழக்கில் நடிகர்கள் சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்தார். இந்த வழக்கில், மான் வேட்டையாடிய போது சல்மான் கானுடன் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டோரை விடுவித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி : ஏப்ரல்-05

முக்கிய தலைவர்கள் பலர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு பின்னர் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.