Home Archive by category தேசம் (Page 2)

தேசம்

வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்தும் ஆராயப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மேலும் அனைத்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் முழுவதுமாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், முக்கிய ரயில் நிலைங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

30 கோடி மதிப்புள்ள நாணயங்களை மாற்ற திருப்பதி நிர்வாகம் புதிய திட்டம் தீட்டியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் உண்டியல் மூலம் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இதில் நாணயங்கள் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வருகிறது. ஜல்லடைகள் மூலம் பிரித்து 10, 5, 2, 1 என மூட்டைகளாக கட்டப்பட்டு, திருப்பதியில் தேவஸ்தான அலுவலகத்தில் உள்ள பெட்டகங்களில் அவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
இந்த நாணயங்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 2 முறை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாணயங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவில்லை. இந்த நாணயங்களை சரிபார்த்து வாங்க அதிக நேரம் செலவாகும் என்பதால் எந்த வங்கியும் நாணயங்களை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாணய பிரச்சினை வரும் என்பதை உணர்ந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோடி ரூபாய் வரை நாணயங்களை டெபாசிட் செய்து கொள்ளும் வங்கியில், மேலும் ஒரு கோடி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தது. ஒரே சமயத்தில் 2 கோடி வரை டெபாசிட் வருகிறது என்பதால் நாணயங்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சில நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம், கவளப்பாறை பகுதியில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டன. இதுவரை கேரளாவில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 791 வீடுகள் மழையால் முழுமையாக இடிந்து விட்டது. கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து முகாம்களில் தங்கி இருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். தற்போது 13 ஆயிரத்து 42 பேர் மட்டுமே முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்யுமென்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ‘மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில், ஒருமுறை உபயோகப்படும்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்’ என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற செயலகத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சணல், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

அரசுக் கல்லூரிகளைப் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டு முடியும் தருவாயில், ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிக்காலத்தின் போது 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் இதற்கான விதிமுறையில் மாற்றம் செய்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக்கால ஊதியம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. விதிமுறையில் மாற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும், சில வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்யின் 75 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபிஆசாத், பூபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்றத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

திரவ என்ஜினை இயக்கி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திராயன்-2வை இஸ்ரோ கொண்டு சென்றுள்ளது. புதன்கிழமை அதாவது நாளை மற்றும் ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 விண்கலத்தின் திசை மாற்றப்படும் என்றும், 4 முறை மாற்றிய பிறகு 100 கிலோ மீட்டர் தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன் 2 அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திராயன் 2வில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும் என்றும், பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 2 முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் தனது ஆய்வை தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அது சென்றடைந்தது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் இன்று புவி வட்ட பாதையை விட்டு வெளியேறிசந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் வட்டப்பாதையை சுற்றத்தொடங்கியுள்ளது.

ஜம்முவில் தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவரை விமானப்படையினர் பத்திரமாக  மீட்டனர் .

ஜம்மு – காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு அருகே தாவி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.