Home Archive by category Uncategorized

Uncategorized

தருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்

தருமபுரி அருகே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அரூர் அருகே பாலியல் பலாத்காரத்தின்போது படுகாயமடைந்த  பிளஸ்-2 மாணவி சவுமியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை காவல் கண்காணிப்பாளர்செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச்சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரை தேடி வந்தனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பதுங்கியிருந்த சதீசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ரமேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மாற்றப்பட்டு அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி விசரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வைக் கட்டாயம் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்பதைக் கண்டித்தும்,  வருகைப் பதிவு குறைந்த மாணவர்கள் தேர்வு எழுத ஒரு பாடத்திற்கு ரூ. 200/- அபராதம் என்பதை மொத்தமாக ரூ.500/- என மாற்றம் செய்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நேற்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவ, மாணவியர் அமைதியான முறையில் பல்கலைக் கழகம் முன்பு கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவில்லை. இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

இதனிடையே முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண்மூடித் தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மாணவ, மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல் துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் நிறுவப் பெற்றுள்ள பல்கலைக் கழகம் முன்பு திரண்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நேரத்தில் பல்கலைக் கழக நிர்வாகமும், காவல் துறையும் பேச்சு வார்த்தை நடத்தி, மாணவர்களின் கோரிக்கைக்கு தீர்வை ஏற்படுத்தியிருந்தால் பிரச்சனை தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

என தெரிவித்துள்ளார்.

 

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

சென்னையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் நிராகரிப்பு

ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் எனப்பட்ட  தற்போதைய  ரஷியா படையெடுத்ததற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதுதான் தலிபான் அமைப்பாகும்.  90-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. மேலும் தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா மாறியது. அப்போது முதல் ஆப்கானிஸ்தானின் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் நாள்தோறும் பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை செய்யத் தயார் என ரஷியா அறிவித்த்து. மேலும், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தப்படும் எனவும் ரஷியா கூறியது. இதனை தலிபான்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு  நிராகரித்துள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் எனவும்,மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை எனவும் ரஷியாவிற்கு,  ஆப்கானிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கவுன்சிலிங்கையும் ஆன்லைன் வாயிலாக நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

ஆன்லைன் மூலமாக பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கலந்தாய்வுக்கு தடையில்லை  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : மே-17

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவால், இணைய வசதி இல்லாத கிராமப்புற ஏழை மாணவர்கள் பொறியியல் பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர், மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக ஏற்க மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நாளை முதல் மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை டி.டி மூலமாகவும் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை ஆன்லைன் முறை உறுதி செய்யும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆன்லைன் மூலம் மட்டும் பொறியியல் கலந்தாய்வு என்ற முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் உள்ளதையும், டிடி மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் பத்திரிக்கை, ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான விவரங்களை ஜூன் 8-ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில்பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி : மே-14

கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாகர்கோவில்மார்த்தாண்டம்தக்கலைபேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திடீரென கருமேகங்கள் திரண்டது. பலத்த காற்று காரணமாகமின்கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பெய்த கனமழையால்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.  இதேபோல், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

குட்கா வழக்கு :அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி பதவி நீக்கம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

 

 

குட்கா வழக்கில் மேல் முறையீடு செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள ஊழியர் சிவகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது, மிகுந்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும், பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார். சுகாதார ஆய்வாளராக இருக்கும் சிவகுமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக”, பினாமிமுறையில் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் தங்கள் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் அல்லது முதலமைச்சர் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  அதுமட்டுமின்றி, முகுல் ரோத்தகி போன்ற மூத்த வழக்கறிஞரை நியமிக்கும் அளவுக்கு சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகுமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புப்பிரிவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை சாத்தனூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து வரும் 14 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : மே-10

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையிலிருந்து 2018 ஆம் ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களது வேண்டுகோளினை ஏற்று, சாத்தனூர் அணையிலிருந்து வரும் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில், வினாடிக்கு 350 கனஅடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மே 11ம் தேதி நேபாளத்திற்கு 2 நாள் அரசு முறைப்பயணம்

 

 

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் நேபாளத்திற்கு 2 நாள் அரசு முறைப்பயணம் செல்ல உள்ளார்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேபாளத்திற்கு சென்றார்இதையடுத்து தற்போது வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. மேலும், 6 ஆயிரம் கோடி செலவில் அருண்-3 எனப்படும் 900 மெகாவாட் நீர் மின்திட்டத்துக்குஅடிக்கல், பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளையும் மோடி தொடங்கி வைக்க உள்ளார்..

ஐபிஎல்: டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்

 

 

ஐ.பி.எல்லில் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார்.

ஏப்ரல்-25 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இந்தாண்டு நடைபெற்றுவரும் போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால், இரு அணிகளும், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில், தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.