சிறப்பு கட்டுரை

மீண்டும் இலங்கை தமிழர்களுக்கு நெருக்கடி

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட, இலங்கை அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார், தொடர்ந்து அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் தேர்தலில் தமிழர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் கோத்தபயவுக்கு கிடைக்கவில்லை, அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரமதாசவைதான் தமிழர்கள் ஆதரித்து வாக்களித்திருந்தனர். ஈழப்போரில் விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்ததில் பெரும் பங்குவகித்த கோத்தபய, அதிபராக வருவதில் தமிழர்கள் விருப்பம் கொள்ளவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தீர்க்கமாக வெளிக்காட்டின. இதனை கோத்தபய ராஜபக்ச, தான் அதிபராக பதவியேற்கும் போது வெளிப்படையாகவே தனது உரையில் குறிப்பிட்டார். அதில். ‘தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும், சிங்களர்கள் அளித்த வாக்குகளாலே தான் வெற்றி பெற்றதாகவும்’ தெரிவித்தார்.

கோத்தபய அதிபராக பதவியேற்றதும் தனது முதல் உரையிலேயே இவ்வாறு கூறியிருந்தது, இலங்கை தமிழர்களிடமும், இஸ்லாமியர்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் இலங்கையில் அடுத்தடுத்து நடந்து வருபவைகள் அனைத்தும், தமிழர்களை அச்சுறுத்துவதாக உள்ளது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் பாதுகாப்பையும் பொது அமைதியையும் ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். திடீரென அமலுக்கு வந்துள்ள இந்த அவசர சட்டத்தால் தமிழர்களும், இஸ்லாமியர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் ஆண்டு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது அனைத்து தரப்பு ஆதரவுகளும் தடைபட்டு போய் நிற்கதியாய் போரிட்ட விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் இலங்கை அரசு கொன்று குவித்தது. முள்ளிவாய்க்கால் பகுதில் உள்ள திறந்தவெளியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களுக்கு அடியில் பதுங்கு குழிகளை தோண்டி, தமிழர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஆனால் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாத இலங்கை அரசு, அந்த மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது. இந்த கொடூர தாக்குதலில் அந்தப் பகுதி முழுவதுமே ரத்த ஆறாக ஓடியது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் செத்து மடிந்தனர். இந்த முள்ளிவாய்க்கால் கோரப் படுகொலை உலக வரலாற்றில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இனப்படுகொலையின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றாக அதிகரித்தது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இந்த போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இறுதியாக முல்லைத்தீவு அருகேயுள்ள நத்திகடல் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பின்னர் ஏராளமானோர் அகதிகளாக அங்கிருந்து வெளியேறினர். குழந்தைகள், பெண்கள் என பலருடைய உயிர் தியாகத்திற்கு பிறகு, இனி இலங்கை தமிழர்களுக்கு அமைதியான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச அதிபராக பதவியேற்றதுமே தமிழர்களிடையே அதிருப்தி உருவானது. இந்த நிலையில் தற்போது அவசர சட்டம் மூலம் தமிழர்கள் பகுதியில் ராணுவம் ரோந்து செல்வது, தமிழர்கள் முழுமையாக ஒடுக்கப்படுவார்களா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளது. மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவும் தற்போது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகார பலத்துடன் நேரடியாகவே தமிழர்கள் மீதான தனது நெருக்கடியை ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. ஏற்கனவே அதிபர் தேர்தலின் முடிவுகள் இலங்கையில் காணப்படும் இனவாத பிரிவினையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இதனிடையே இப்போது உருவெடுத்துள்ள ராணுவ நடவடிக்கை தமிழர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துவதோடு, அச்சுறுத்தலையும் ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இலங்கை தமிழர்கள் முழுமையாக கையறுபட்டு இருக்கும் இந்த நேரத்தில், அவர்களது உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உலக நாடுகளும் ஐ,நா அமைப்பும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றுமொரு துயரம் இலங்கை தமிழர்களுக்கு நடைபெறாதவாறு இந்தியாவும் தீர்க்கமான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

Show More

Related News

Back to top button
Close