சினிமாஸ்பெஷல்

”கலைகளின் அவதாரம் கமல்” – பிறந்தநாள் நாயகன்

சினிமாவிற்கு உருவம் கொடுத்து அதனை முழுமையாக பார்த்தால் அதில் ‘கமல்’ -ன் முகம்தான் தெரியும். ஆம்..! இந்த உவமையை ஏற்றுக்கொள்வதற்கு அந்த கலைத்தாயே பெருமைக்கொள்வாள். சினிமாவில் இருக்கும் அனைத்து துறைகளையும் ஆட்சி செய்தவர் கமலாக மட்டுமே இருக்க முடியும். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற அகந்தை இல்லாமல், இன்று வரையிலும் புதிது புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார் கமல். அதனால் தான் சினிமாவின் வரலாற்றில் ஒரு பக்கமாக மட்டுமல்லாது தனி அதிகாரமாகவே கமல் விளங்கிவருகிறார்.

களத்தூர் கண்ணம்மா, ஆனந்த ஜோதி, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, வானம்பாடி ஆகிய 5 படங்களில் நடித்திருந்த நிலையில், கமலின் அப்பா சீனிவாசன், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களிடம், இவன் (கமல்) படிப்பை விட கலைத் துறையில் ஆர்வமா இருக்கான். அதனால உங்கக்கிட்டே கொண்டு வந்துட்டேன்’ என்று கூறி விட்டுச் சென்றார். கமலின் தந்தைக்கும் கமலுக்கும் உள்ள உறவு, தேர்ந்த இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பைப் போன்றதாகவே இருந்தது. அதனால் தான் கமலின் உள்ளுணர்வை புரிந்த அவரது தந்தை கமலின் விருப்பத்திற்கு ஏற்ப நாடகத்துறையில் சேர்த்துவிட்டார். பின்னாளில் அவ்வை டி.கே சண்முகம் நினைவாக தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்றே பெயர் வைத்தார் கமல். இந்த படத்தில் வயதான பெண்மனி தோற்றத்தில் நடித்து, அதற்கேற்றவாறே பின்னணி குரல் கொடுத்தும் பாட்டு பாடியும் அசத்தினார் கமல்.

சிறு வயதிலேயே நாடகங்களிலும் சினிமாக்களிலும் நடித்து வந்த கமலுக்கு இயக்குநராக ஆக வேண்டும் என்பதே தீராத ஆசையாக இருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட ஓர் வட்டத்திற்குள் மட்டும் சுழலாமல் சினிமாவில் கிடைத்த அனைத்து துறைகளிலும் ஊடுருவினார் கமல்.  உதவி நடன இயக்குநராக பணிபுரிந்து வந்த கமல் பின்னாளில்  எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா…’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம். தொடர்ந்து பல படங்களில் நடன அமைப்பாளராக பணியாற்றியதால், கமல் நடித்த படங்களில் அவரது நடனங்கள் வெகு சிறப்பாக அமைந்திருக்கும்.

Image result for kamal haasan old images

சினிமாவில் சகலகலா வல்லவரான கமலுக்கு திரைப்படங்களை பார்ப்பதை விடவும் புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் இருந்தது. இதிகாசங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றையும் வாசித்துவிடுவார். அதேபோல் சினிமாவிற்கு தேவையான லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பதில் வல்லவர் கமல். எந்த சினிமாவிற்கு எந்த மாதிரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் இவரை மிஞ்சுவதற்கும் ஆள் இல்லை.  கமலுக்கு, தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனை தொழில் நுட்பங்களிலும் வல்லவராகவும் முன்னோடியாகவும் உருவாக்கியது. ‘விக்ரம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஆளவந்தான்’, ‘குருதிப்புனல்’, ’தசவதாரம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக கூறலாம். இதுமட்டுமின்றி இந்த வரிசையில் இன்னும் நிறைய சினிமாக்களும் உண்டு. பேசும் சினிமா வந்து பல வருடங்களுக்குப் பிறகும், ‘பேசும்படம்’ என்ற பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார்.

எம்.ஜி.ஆர் காலம் முதல் தற்போது வரை பல ஜாம்பாவான்களுடன் பணியாற்றிய பெருமையும் அவர்களுடனான நட்பும் கமலுக்கு இருந்த போதும்,  சினிமாவில் பல நல்ல திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்த பெருமை அவருக்குண்டு. ‘சத்யா’ படத்தின் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா. சத்யராஜ், நாசர், சந்தானபாரதி, கரண், டெல்லிகணேஷ் போன்றவர்கள் முதல் தற்போதுள்ள இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் வரை சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினி, நாசர், ரமேஷ் அரவிந்த், சந்தானபாரதி, இளையராஜா, மறைந்த எழுத்தாளர் சுஜாதா, கிரேஷி மோகன் ஆகியோர் கமலின் நெருங்கிய நட்பு பட்டியலில் இருப்பவர்கள். பாலசந்தரின் படங்களில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த காலங்களில் ‘கமல் நடித்துக் கொண்டிருக்கிறான், அவனது நடிப்பைப் பார்த்து நீயும் எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக்கொள்’ என பாலசந்தர் ரஜினியிடம் கூறுவாராம். இதனை ரஜினியே ஒருமுறை மேடையில் சொன்னபோது விழா அரங்கமே அதிர்ந்தது. ரஜினி, கமல் இருவருமே பாலசந்தரின் செல்லப்பிள்ளையாக இருந்தார்கள் என்பது திரையுலகமே நன்கு அறிந்தது.

Kamal Haasan and Nagesh in Nammavar (1994)

கமலுக்கு நாகேஷ் என்றால் தனி உற்சாகம் வந்துவிடும் ‘நாகேஷின் நடிப்பைக் கண்டு நான் வியந்துள்ளேன், அவரிடம் இருந்தே நிறைய கற்றுள்ளேன்’ என்று கமல் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். அதே போன்று கமலின் பல படங்களிலும் நாகேஷ் இடம்பெற்றுவிடுவார். நாகேஷ் நடித்த கடைசிப் படமே கமலுடன் நடித்த ‘தசவதாரம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. நாகேஷைப் போன்றே நடிகை மனோரமாவும் கமலின் மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று தமிழ்ச் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய கமல், மகேந்திரனின் இயக்கத்தில் மட்டும் நடிக்கமால் போனது தமிழ் சினிமாவில் ஒரு பிழையாகிப் போனது. ஆரம்ப காலத்தில் கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தையை நடிகர்  லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். இங்குதான் கமல் தனித்து காணப்படுகிறார். யாரிடம் கற்றுக்கொள்கிறோம் என்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எதை கற்க வேண்டும், எப்படி கற்க வேண்டும் என்பதை மட்டுமே கமல் கருத்தில் கொள்வார், அதனால் தான் சினிமாவில் இன்றுவரை யாராலும் தொட முடியாத உச்சத்தில் இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரம், நாடக நடிகர், கதையாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடகர், பாடலாசிரியர், நடன அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்கள் தரித்தவர் கமல் மட்டுமே. புதிய முயற்சிகள், வித்தியாசமான கதைக்களம், யாருமே செய்திடாத கதாபாத்திரம் என பல சோதனைகளை சினிமாவில் செய்துக்கொண்டேயிருந்தார் கமல், இதற்கடுத்து தான் இவருக்கு அதன் வெற்றி, தோல்வி என்பதெல்லாம். சிரித்துக்கொண்டே அழுவார், அழுதுக்கொண்டே சிரிப்பார், திடீரென மெளனமாகவே திரையில் காட்சியளித்து தனது கண்களாலும் நடிப்பார், இவ்வாறாக நடிப்பில் பல புதிய இலக்கணங்களை படைத்தவர் இந்த கலைமகன்.

Related image

1997 ஆம் ஆண்டு கமல் மிகப்பிரமாண்டமாக ஆரம்பித்த அவரது கனவு படமான ‘மருதநாயகம்’ திரைப்படம் மட்டும் தான்,  அவரது ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் கமலிடம் இறுதியாக எதிர்பார்ப்பது. இதைத் தவிர தன்னால் எதையெல்லாம் சினிமாவிற்காக கொடுக்க முடியுமோ அதையெல்லாம் முழு அர்பணிப்புடனும், உண்மையுடனும் வாரி வழங்கி விட்டார் கமல். இவரது சிறந்த நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக இவர் நடித்த எந்த படங்களையும் விட்டுவிடாமல் எல்லா படங்களையுமே குறிப்பிட்டு நாம் மெய்சிலிர்க்கலாம். ஏனெனில் கமல் படங்களில் நடித்தார் என்பதை விட அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. இனியொரு தவம் செய்தாலும் உலக சினிமாவே காணக்கிடைக்காத பொக்கிஷம் கமல். அந்த பொக்கிஷமான கமல் வாழ்ந்த காலம் இந்திய சினிமாவின் பொற்காலம் என்று மெய்யுரைப்பதில் நிச்சயம் பிழை இருக்காது தான். அப்பேற்பட்ட மகா கலைஞன் கமலுக்கு ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’

பீ.அப்துல் ரஹ்மான்

Tags
Show More

Related News

Back to top button
Close