உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் நெருக்கடி

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளது, சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க – ஈரான் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் முக்கிய ராணுவ தலைவரான காசெம் சுலேமானீ ஈராக்கில் வைத்து, அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்டார். டிரம்பின் உத்தரவின் பெயரிலேயே நடந்த இந்த தாக்குதல் ஈரானுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதற்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி நேரிடையாகவே அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தார். சொன்னது போலவே காசெம் சுலேமானீ உடல் அடக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஈரான் தனது அதிரடியை தொடங்கியது. ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் அடுத்தடுத்து ஏவுகனை தாக்குதல் மேற்கொண்டது. இதனால் வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும், உக்ரைன் நாட்டு போயிங் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டொனால்ட் டிராம்ப் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளால்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். இதையடுத்து, “தன்னிச்சையாக போர் தொடுத்த அதிபர் ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கும் வகையிலும், ஈரானுக்கு எதிரான டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என அவர் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு, முடிவுகள் எடுக்காமல் அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் நான்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், உடனடியாக வன்முறையைத் தடுக்கும் விதமாக பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க நிர்வாகம் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும்” எனவும் நான்ஸி பெலோசி தெரிவித்துள்ளார். இதனால் டிராம்பிற்கு கடுமையான நெருக்கடிகள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் மட்டுமில்லாமல் சர்வதேச அரசியல் அரங்கிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close