அரசியல்

குஜராத் மாநிலத்திற்கு மட்டும் நிபந்தனையைத் தளர்த்தியது ஏன் ? ராமதாஸ் அறிக்கை

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழுக்கு எதிரான இந்த சமூக அநீதியை நியாயப்படுத்த தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் கூறியுள்ளார். ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு, 2013 ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மாநில மொழியில் மட்டும் நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாநில மொழிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்றால், அந்தத் தேர்வுகளை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கான பொது நுழைவுத்தேர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டு, குஜராத் மாநிலத்திற்கு மட்டும் நிபந்தனையைத் தளர்த்தியது எந்த வகையில் நியாயம்? என அவர் வினவியுள்ளார். நீட் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்தும் தேசிய தேர்வு முகமை, ஐஐடி நுழைவுத்தேர்வையும் 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே 2020 ஆம் ஆண்டிலிருந்து ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close