அரசியல்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச்சாயத்தைப் பூசிய பாஜகவுக்கு வைகோ கடும் கண்டனம்

திருக்குறளை இந்துத்துவ சிமிழுக்குள் அடைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து காவல்துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழி மட்டுமே இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்தி மொழி இடம் பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்திட உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ள வைகோ, மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கு அ.தி.மு.க. அரசும் துணையாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளை தயாரித்திருப்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ள வைகோ, தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் ஒருபுறம் பறைசாற்றிக்கொண்டு இருக்கும்போது, மற்றொரு புறத்தில் தமிழை அழிக்கும் செயலில் பா.ஜ.க ஈடுபட்டிருப்பதை அக்கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்கும் என உள்துறை அமைச்சர் கொக்கரித்திருந்த சூழலில், தமிழக அரசும் இந்தியை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டும் செயல் தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என எச்சரித்துள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் என மனித தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகவும், மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகவும் திகழ்வதாக கூறியுள்ளார். லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை தந்த வள்ளுவரை, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் பாடியதையும் சுட்டிகாட்டியுள்ளார். இத்தகைய பல பெருமைகளைக் கொண்ட திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச்சாயத்தைப் பூசி பா.ஜ.க டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடைக்க நினைப்பதை நிறுத்தாவிட்டால், தமிழக மக்கள் கொதித்தெழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close