தமிழ்நாடு

திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை பணிகளுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகிய திருநங்கைகள், தங்களை உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் நான்கு பேரையும் உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்க சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது. ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தங்களை உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 திருநங்கைகளும் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்த பிறகுதான் மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பாகுபாடுகளை களையவே திருநங்கைகளை உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறிய நீதிபதி, நான்கு திருநங்கைகளையும் உடற்தகுதித் தேர்வில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை, டிசம்பர் 5ம் தேதிக்குள் அமல்படுத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு நடைமுறை  முழுவதற்கும் தடை விதிக்க நேரிடும் என்றும் தேர்வு வாரியத்திற்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related News

Back to top button
Close