உலகம்

விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான்! – ஈரான் ஒப்புதல்

உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க – ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம்‌ நடுவானில் வெடித்துச் சிதறியது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரான், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் விபத்தின் உண்மைத் தன்மையைக் ‌கண்டறியும் கறுப்பு பெட்டியை யாரிடமும் வழங்க முடியாது என ஈரான் அரசு தெரிவித்தது. இது சர்வதேச அரங்கில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது. இவ்வாறான சூழல்களில் ஈரான் படையினரே தவறுதலாக விமானத்தை வீழ்த்தியிருக்கலாம் என அமெரிக்காவும் கனடாவும் சந்தேகம் தெரிவித்தது.

இதையடுத்து செயற்கைக்கோள்கள், ராடார் உள்ளிட்டவற்றின் சிக்னல் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் இரண்டு SA15 ரஷ்ய ரக ஏவுகணைகள் மூலம் உக்ரைன் விமானம் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவும் விமானத்தை வீழ்த்தியது ஈரான்தான் என குற்றம்சாட்டினார். இந்த நிலையில் உக்ரைன் விமானத்தை தங்கள் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மனிதத் தவறே காரணம் எனவும், உக்ரைன் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தவில்லை எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதுநாள் வரை மறுத்து வந்த ஈரான் தற்போது தாமாகவே முன்வந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்டுள்ளது.

Tags
Show More

Related News

Back to top button
Close